
கோவை மேட்டுப்பாளையத்தில் 3 யானைகள் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
யானைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய உயிரின குற்ற தடுப்புபிரிவு மற்றும் சிபிஐ விசாரணை கோரி மனோஜ் இமானுவேல், முத்துச்செல்வம் ஆகியோர் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, 2010 -11ஆம் ஆண்டுகளில் 3 யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பாக, தேனியைச் சேர்ந்த குபேந்திரன், சிங்கம் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தந்தத்திற்காக கல்லார் வனப்பகுதியில் 3 யானைகளை வேட்டையாடியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் யானை தந்தம் கடத்தல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் சிபிஐ விசாரிக்க வாய்ப்புள்ளது. மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழந்த சம்பவங்களையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.