[X] Close

சென்னை சுவாசிக்கும் தூய்மைக் காற்று, காரணம் 'மறைந்திருக்கும்' இந்தக் காடு!- #MadrasDay2021

சிறப்புக் களம்

Guindy-National-Park-is-one-of-the-biggest-air-purifier-of-Chennai

"அட என்னப்பா இந்த ஊர்ல எப்படிதான் இருக்கீங்களோ, இவ்வளவு வெக்கை, சுத்தமான காத்தே உங்களுக்கு கிடைக்காதுபோல" இப்படிதான் சென்னை வாசிகளை நோக்கி வெளியூர்களில் இருந்து வருவோர்கள் பரிதாபமாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவின் மற்ற பெரு நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னையின் காற்று மாசு அவ்வளவு மோசமில்லை என்பதே நிதர்சனம். நாம் ஓரளவுக்கு நல்ல காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கெல்லாம் காரணம், சென்னையின் வாகன நெரிசல்களுக்குள் மறைந்திருக்கும் ஒரு காடு என்றால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். அந்தக் காட்டுப் பகுதிதான் கிண்டி தேசியப் பூங்கா. கிண்டி சிறுவர் பூங்காவின் பின்பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு வனப்பகுதிதான் இந்த தேசியப் பூங்கா.

image

சென்னை மாநகரின் மத்தியில் 270 ஹெக்டேர் பரப்பரளவு கொண்ட கிண்டி தேசியப் பூங்கா, இந்தியாவில் இருக்கும் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். மேலும் மாநகராட்சிப் பகுதியில் இருக்கும் இரண்டாவது தேசியப் பூங்கா இது மட்டுமே. முதலாவது மும்பை மாநகரில் அமைந்துள்ள சஞ்ஜய் காந்தி தேசியப் பூங்காவாகும். இப்பகுதி ஆங்கிலேயர் காலத்தில் கில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958-இல் தமிழ்நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது. பின்பு, மத்திய அரசால் தேசியப் பூங்காவுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அரிய வகைத் தாவரங்களும், உயிரினங்களும் கொண்ட ஒரு சரணாலயமாகவே இது பார்க்கப்படுகிறது. அதனால்தான், ஆண்டுதோறும் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.


Advertisement

image

"பிளாக் பக்" இங்க இருக்கு தெரியுமா?

கிண்டி தேசியப் பூங்கா முன்னொரு காலத்தில் பசுமைமாறாக் காடுகள் என அறியப்பட்டது. கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தில் ஆளுநர் மாளிகையும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் (ஐ.ஐ.டி.) உள்ளன. வெளிமான் (blackbuck ) இயற்கைப் புகலிடமாகவும் கிண்டி தேசியப் பூங்கா விளங்குகிறது. மேலும், 350 தாவர வகைகளும், 130 பறவை வகைகளும் மற்றும் 60 வகை பூச்சிகள், 60 வகை சிலந்திகள், நரி, கீரி உள்ளிட்ட உயிரினங்களும் இந்தப் பூங்காவில் உள்ளன.


Advertisement

இப்போது இந்தப் பூங்காவில் மட்டும் 200-க்கும் அதிகமான வெளிமான்களும், 670 புள்ளிமான்களும் உள்ளன. முக்கியமாக தமிழகத்தில் சத்தியமங்களம் வனப் பகுதிகளில் மட்டுமே வெளிமான்களை பார்க்க முடியும். அதற்கடுத்து கிண்டி தேசியப் பூங்காவில் மட்டுமே வெளிமான்களை பார்க்கலாம். வெளிமான்கள் அழிந்து வரும் இனங்களின் விலங்குகள் பட்டியலில் பிரதானமாக இருப்பவை என்பது முக்கியமானது.

image

கொஞ்சமா குறைஞ்சபோன வனம்!

ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கான கட்டடங்கள் கட்டுவதற்காக இந்தக் காட்டின் ஒரு பகுதி மத்திய கல்வி அமைச்சகத்திடம் 1958-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, நகரத்தின் எல்லை விரிந்து கொண்டே செல்ல, காட்டுப் பகுதியும் சுருங்கிவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1988-இன்படி கிண்டி தேசியப் பூங்காவின் ஏழு முதல் 10 கி.மீ. பரப்பு கொண்ட சுற்றுப் பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படி வரையறுக்கப்படுவதன் நோக்கம், பாதுகாக்கப்பட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் பருவகால மாற்றம் சார்ந்து இடம்பெயர வசதியாக இருக்கும் என்பதுதான். அத்துடன், மனித சமூகம் சார்ந்த நவீன வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து அந்த உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்தப் பகுதி பேருதவி புரிந்து வருகிறது.

image

இரண்டு ஏரி, 5 குளம் !

இந்த தேசியப் பூங்காவின் அங்கமாக சிறிதும் பெரிதாக இரண்டு ஏரிகள் உள்ளன. மேலும், 5 குளங்களும் உள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஏரிகளும் குளங்களும் எப்போதும் வற்றியதே இல்லை. அதனால் மான்களும் இன்னப் பிற விலங்கினங்களும் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வெளியே செல்வதே இல்லை. தேசியப் பூங்காவில் பெய்யும் மழை நீர் அனைத்தும் இந்த ஏரிகளுக்கும் குளங்களுக்கும் செல்வதுபோல வனத்துறை பணிகளை மேற்கொண்டதே நீர் வற்றாததற்கான காரணம்.


Advertisement

Advertisement
[X] Close