[X] Close

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் - நெட்டிசன்களின் கற்பனையும்.. மக்களின் எதிர்பார்ப்புகளும்

வீடியோ ஸ்டோரி

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் அறிக்கை தயார் செய்யப்படும் என தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கபட்டுள்ள நிலையில் இத்திட்டம் துவங்கப்பட்டால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.


Advertisement

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2 வது பெரிய நகரான தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரையின் மக்கள் தொகை 35 லட்சத்தையும் தாண்டியுள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கண்ணை கட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது.  இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு  இடங்களுக்கு செல்ல கால தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த வரலாற்று நகரமான மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமைய பெற்றுள்ளது. 75 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளுடன் மெட்ரோ நகர் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, அதற்கு ஏற்ப பல இடங்களில் சாலை விரிவாக்கம் இல்லாமல் உள்ளது போன்ற பல்வேறு கட்டமைப்பு குறைபாடுகளால் போக்குவரத்து நெரிசலால் மதுரை சிக்கி தவிக்கிறது.


Advertisement

 image

24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பரபரப்பாக இயங்கும் மக்கள் உரிய நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் வகையிலும் தொழில் வளர்ச்சியடையவும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை செவிசாய்த்துள்ள தற்போதைய அரசு கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான முழுமையான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஆய்வறிக்கை தயார் செய்யப்படும் என  மதுரையை சேர்ந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கடந்த 18ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தபடும் என உறுதி அளித்துள்ளது மதுரை மக்களிடையே பெறும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதே நம்பிக்கையில் நெட்டிசன்கள் காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் புகைப்படங்களை தயார் செய்து அவை தற்பொழுது  வாட்ஸப் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் கூலி வேலை பார்க்கும் சாமானிய மக்கள் முதல் அனைத்து பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாகவும் உரிய நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிமையாக சென்றடைய முடியும் என்பதால் இத்திட்டம் மதுரை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள்.

image

பல்வேறு சிறு குறு தொழில்களை சார்ந்துள்ள மதுரையில் பணி புரிவதற்காக மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதால் அவர்களின் வசதிக்கு ஏற்ப அண்டை மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மெட்ரோ ரயில் இயங்கும்படி கட்டமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வணிகர்கள், இதனால் எதிர்காலத்தில் தொழில் வளம் அதிகரிப்பதுடன் மதுரை தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாகவும், நவீனமயமான மாவட்டமாகவும் மாறும் என நம்பிக்கை தெரிவிக்கினர்.

மெட்ரோ திட்டத்தை நகர் பகுதிகளில் மட்டுமல்லாமல் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட ஊரக பகுதிகளை இணைத்து பயணித்தால் வேளாண் வளர்ச்சி அடையும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

image

மெட்ரோ ரயில் திட்டம் வரும் அதே நேரத்தில் அதனை பயன்படுத்தும் பரபரப்பான தொழில்களையும், அது சார்ந்த மக்களையும் சேர்த்து உருவாக்க வேண்டும் எனவும் அவ்வாறு உருவாக்கும் பட்சத்தில் சென்னை போன்ற பெரு நகராக மதுரை உருவெடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய திட்டமாக இத்திட்டம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக உள்ளதால் தற்பொழுது செயல்படுத்தினால் எதிர்காலத்தில் மதுரை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும் எனவும் மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மதுரை மக்கள்...

மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான இத்திட்டத்திற்கு சாத்தியக்கூறுகளை ஆராயும் அறிக்கை தயார் செய்வதோடு விட்டுவிடாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- கணேஷ்குமார்


Advertisement

Advertisement
[X] Close