Published : 20,Aug 2021 07:33 PM

2024 தேர்தலுக்கான திட்டமிடுதலை தற்போதே தொடங்க வேண்டும் - சோனியா காந்தி அழைப்பு

Congress-Party-Interim-Leader-Sonia-Gandhi-calls-on-opposition-leaders-to-start-planning-for-2024-parliamentary-elections-now

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அதற்கான திட்டமிடுதலை தற்போதே தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் உரையாற்றிய சோனியா, சுதந்திர இந்தியாவின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசை நம் நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் கூடிய திட்டத்தை தற்போதே தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது மிகப்பெரிய சவால் என்றபோதிலும், ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு இதைவிட மாற்று இல்லை என்று அவர் குறிப்பிட்டார். நமக்கு வெவ்வேறு கட்டாயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து நாட்டின் நலனுக்காக ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது என்று சோனியா தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றாக இணைந்து செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா விசயத்தில், 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு செய்த தவறை திருத்த வைத்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்த இந்த ஒற்றுமை வருங்காலத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்த வேண்டிய போராட்டத்திலும் தொடரும் என நம்புவதாக சோனியா காந்தி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்