Published : 18,Aug 2021 10:27 PM
பச்சைக்கொடி காட்டுவார்களா தலிபான்கள்.. என்ன ஆகும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம்?

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது சர்வதேச அளவில் தலைப்பு செய்தியாக உள்ளது. இஸ்லாமின் ஷரியத் சட்டப்படி நாட்டில் ஆட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டது தலிபான். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது? அங்குள்ள மக்களின் நிலை, மனித உரிமை மீறல் அனைத்தையும் கடந்து இதை இங்கே இப்போது பேசுவதற்கு காரணம் விளையாட்டுக்கு ஒரு நாட்டின் நிலையை மாற்றி எழுதக் கூடிய வல்லமை உள்ளது. அதை மறுக்க முடியாது. ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலமாகவும், அதில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவும் தன் நாட்டு மக்களிடையே ஒரு உந்துதலை ஏற்படுத்தும் காந்த சக்தி விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது. இது அனைத்து விதமான விளையாட்டுக்கும் பொருந்திப் போகின்ற பொது விதி.
அதன் மூலம் அடுத்த தலைமுறையினரை விளையாட்டு களம் நோக்கி இழுக்க செய்யலாம். அது நாட்டின் வளர்ச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் கைகொடுக்கும். ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட், கால்பந்து மாதிரியான விளையாட்டுகள் பழமை வாதங்களை புறந்தள்ள உதவின. சில பல அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மாதிரியானவற்றை கடந்தே ஆப்கானிஸ்தான் நாட்டு வீரர்கள் விளையாட்டு உலகில் நட்சத்திரங்களாக மிளிர தொடங்கினர். இப்போது அந்த நட்சகத்திரங்களின் மிளிரல் மங்கலாம்.
குறிப்பாக அந்த நாட்டில் இப்போது மகளிர் விளையாட்டு வீரங்கனைகளின் நிலை கொஞ்சம் மோசமாகவே உள்ளதாக செய்திகள் வருகின்றன. அது தொடர்பாக ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கூட கசப்பான உண்மையை பகிர்ந்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்!
19-ஆம் நூற்றாண்டின் மைய பகுதியில் ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் நாட்டுக்காரர்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அப்படி தான் கிரிக்கெட் விளையாட்டின் விதைகள் ஆப்கனில் விதைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் பார்டரை பகிர்ந்து கொண்ட காரணத்தினால் அந்த நாட்டை பார்த்து ஆப்கன் மக்கள் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றவர்கள் மூலமாகவும் அங்கு கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது.
அதன் மூலம் 1995 வாக்கில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதயமானது.
தலிபான்களின் எதிர்ப்பு!
அனைத்து விளையாட்டுகளையும் தலிபான்கள் எதிர்ப்பது வழக்கம். அந்த வகையில் கிரிக்கெட்டையும் வன்மையை தலிபான்கள் எதிர்த்துள்ளனர். கால ஓட்டத்தில் தலிபான் அமைப்பு தனது மனதை மாற்றிக் கொண்டு எதிர்பினை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. அதன் மூலம் ஆப்கனில் தலிபான் அனுமதி அளித்த ஒரே விளையாட்டாக கிரிக்கெட் திகழ்ந்தது. அதற்கு பாகிஸ்தான் ஆதரவையும் தலிபான் கோரியதாக சொல்லப்பட்டுள்ளது.
வசந்தம் வீசிய 21-ஆம் நூற்றாண்டு!
21-ஆம் நூற்றாண்டு சர்வதேச அளவில் தங்களது அணியின் இருப்பை உறுதி செய்தது ஆப்கன் அணி. 2001-இல் சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் (ஐசிசி) பகுதி நேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இணைந்தது. தொடர்ந்து 2013-இல் அஸோஸியேட் உறுப்பினர் என்ற அங்கீகாரத்தை ஐசிசி கொடுத்தது. இதன் மூலம் நிதி ஆதாரங்களை கொடுத்து ஆப்கன் அணியின் மேம்பாட்டுக்கு உதவியது ஐசிசி.
2015-இல் 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் விளையாடியது. அதில் பங்கேற்றதே போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி. 2017 வாக்கில் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை ஆப்கன் பெற்றது. அதோடு ஐசிசியின் முழு நேர உறுப்பினர் என்ற அங்கீகாரத்தை பெற்றது.
2019 - 50 ஓவர் உலக கோப்பை தொடர், 2016 - டி20 உலக கோப்பை தொடர் மாதிரியான முக்கிய ஐசிசி தொடர்களில் ஆப்கன் அணி பங்கேற்று விளையாடி உள்ளது.
எதிர்காலம் இனி?
வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அந்த அணி இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ள குரூப் 2-வில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகளில் ஆப்கன் விளையாட உள்ளது.
“அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சில அணிகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நிச்சயம் அது உலக கோப்பைக்கு எங்கள் அணியை தயார்படுத்திக் கொள்ள உதவும்” அந்த அணியின் மீடியா மேலாளர் ஹிக்மத் ஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர் அப்படி சொல்ல காரணம் 2000-இல் தலிபான் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுத்த அனுமதி காரணமாக இருக்கலாம்.
ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் மாதிரியான சிறப்பான கிரிக்கெட் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இருந்தாலும் இப்போது தலிபானின் மனநிலை என்ன என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
தலிபான்கள் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக இருந்தால் கிரிக்கெட் உட்பட மற்ற விளையாட்டிற்கும் அனுமதி கொடுப்பார்கள் என நம்புவோம்.