அடுத்தடுத்த திருப்பங்களுடன் கோடநாடு வழக்கு - முக்கிய பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பா?

அடுத்தடுத்த திருப்பங்களுடன் கோடநாடு வழக்கு - முக்கிய பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பா?
அடுத்தடுத்த திருப்பங்களுடன் கோடநாடு வழக்கு - முக்கிய பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பா?

அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது கோடநாடு தொடர் கொலை வழக்கு. இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பா என்ற கோணத்தில் இவ்வழக்கின் சயானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டு, உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று விசாரணை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளை போயின. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும்போது விபத்திற்குள்ளாகி மனைவி, மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம்தேதி தற்கொலை செய்தார். 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு காவலாளி கொலை வழக்கை 10 பேர் மீது பதிவு செய்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் விசாரணை தேவைப்படுவதாக காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சயானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டு, உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று விசாரணை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத் நேரடியாக நடத்திய 3 மணி நேர விசாரணையின் போது, சயானிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கில் சாட்சிகள் மாற்றப்படுதாகவும், முக்கியப் பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பிருப்பதாகவும் சயான் மற்றும் வழக்கில் 2ஆம் நபராக சேர்க்கப்பட்டுள்ள வாளையார் மனோஜ் ஆகியோர் கூறி வந்தனர். எதன் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்தும் சயானிடம் தற்போது விசாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மர்ம முடிச்சுகளுடன் வலம் வரும் கோடநாடு வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் காத்திருக்கின்றன என்றே உறுதியாக கூறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com