[X] Close

தலிபான்களை ஆதரிக்கும் சீனா... ஆப்கன் பிரச்னையை எப்படி அணுகப்போகிறது இந்தியா? - ஒரு பார்வை

சிறப்புக் களம்

China-supports-Taliban-in-Capturing-Afghanistan--What-it-means-for-India

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளது, இனி இந்தியாவிற்கு கொள்கை ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் எவ்வித தாக்கம் ஏற்படப் போகிறது என்பதுதான் பெரும்பாலான உலக நாடுகள் உற்று நோக்கும் விஷயமாக உள்ளது. இது குறித்து சற்று விரிவாக காணலாம்.

20 ஆண்டுகள் விடாப்பிடியாக ஆயுதமேந்தி பெரும் போராட்டத்தை நடத்திய தலிபான் அமைப்பு, இறுதியாக தங்களது இலக்கான ஆப்கானிஸ்தான் நாட்டை வெற்றிகரமாக பிடித்துள்ளனர். அமெரிக்கா என்ற உலக வல்லரசின் கடும் நெருக்கடியிலும தலிபான் அமைப்பு இதனைச் செய்து முடித்ததற்கு மிக முக்கியமான இரண்டு காரணிகள் ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று சீனா.

image


Advertisement

கொள்கை ரீதியில் பாகிஸ்தானிற்கும் பொருளாதாரரீதியில் சீனாவிற்கும ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரும் பிரச்னையாக உள்ள நாடு இந்தியா. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதில்தான் தங்களது வளர்ச்சி அதிகரிக்கும் என இந்த இரண்டு நாடுகளும் மிக நிச்சயமாக நம்புகின்றன.

அதிலும் குறிப்பாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்தியாவிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை, வங்கதேசம், நேபாளம் என நட்பு நாடாக இருந்த நாடுகளின் வாயிலாக கூட இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளது சீனா.

இந்தியாவை எப்போதுமே எதிரியாக பார்க்கும் பாகிஸ்தானிற்கு இந்த விவகாரத்தில் சீனா உதவுகிறது என்று சொன்னால், அதை சிறு குழந்தை கூட நம்பும்.

அப்படித்தான் சீனாவின் கைப்பாவையாக பாகிஸ்தான் மாறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீப ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டு வந்த நட்புறவு, குறிப்பாக அந்நாட்டின் வழியாக ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளவிருந்த வர்த்தக உறவுகள் பாகிஸ்தானிற்கு கண்ணில் விழுந்த தூசி போல உறுத்திக்கொண்டே இருந்தது.

image

காரணம், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி பழமைவாதத்தை விட்டு நவீனத்துவத்தின் ஆப்கனை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தவர். ஆனால் ஆப்கானிஸ்தானில் பழமைவாதம் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பிய தலிபான்களுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உதவுவதன் மூலம் அவர்களை முற்றிலுமாக இந்தியாவிற்கு எதிரானவர்களாக திருப்பிவிடும் எண்ணம் தற்பொழுது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து இருப்பதன் மூலம் பலித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதில் இந்தியாவிற்கு இனி வரக் கூடிய நாட்களில் பெரும் பிரச்சனையாக இருக்கப்போவது பாதுகாப்பு விஷயம். குறிப்பாக - ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எப்பொழுதுமே நேரடியாக அத்துமீறல்களில் ஈடுபடாமல் அல்-காய்தா, இந்தியன் முஜாஹிதீன், தலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஊடுறுவச் செய்து, அதன் மூலமாகவே நாசவேலைகளில் ஈடுபட்டு பொது அமைதியை சீர்குலைக்குப்பார்கள்.

எனவே, இனி வரக்கூடிய நாட்களில் இத்தகைய நிலைமை இந்தியாவில், அதுவும் குறிப்பாக ஜம்மு - கஷ்மீரில் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் அரசு செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொது அமைதிக்கு பிரச்னை இருக்கும்பொழுது எந்த ஒரு நாடாக இருந்தாலும், அதில் கவனம் செலுத்துவதில்தான் அதிக நேரத்தை செலவிடும். அப்படி பாகிஸ்தான் மூலமாக தலிபான்களின் வாயிலாக இந்தியாவிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகரிக்கும்பொழுது ஏற்படும் குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சீனா திட்டங்களை வகுத்து உள்ளது.

image

இந்தப் பதற்றத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ள வைக்கத்தான் மேற்குப் பகுதியில் சீனா, இந்திய துருப்புகள் உடன் பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரத்தில், இலங்கை கடற்படை பகுதியில் அந்நாட்டின் கடற்படையை பலப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மிக வெளிப்படையாகவே ஆதரித்த டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் அமையாமல் பைடன் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இந்தியாவில் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு இதில் ஆர்வம் காட்டும் என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

இவைத் தவிர, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள அரசை பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் அங்கீகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கு இது ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சுமார் 23,000 கோடி ரூபாய் அளவிற்கு ஆப்கானிஸ்தானில் இந்தியா பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது. எனவே, பெரும்பாலான நாடுகள் தலிபான்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்கும்பொழுது இந்தியா நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றால், அது மேலும் சிக்கலை உருவாக்கத்தான் வாய்ப்புள்ளது.

image

ஒருவேளை தலிபான்கள் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு செல்கிறது என்றால், தீவிரவாதத்தைப் பின்பற்றும் அமைப்பை எப்படி ஏற்கலாம் என இந்தியாவிலும் கலகக் குரல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளது.

இப்படி பொருளாதார ரீதியிலும், கொள்கை ரீதியிலும் தலிபான்கள் இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதில் எத்தகைய முடிவுகளை எடுக்க போகிறது என்பதைத்தான் இனி பார்க்க வேண்டியுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close