
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாததை கண்டித்து, அரசு ஊழியர்கள் சார்பிலும், ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பிலும் இன்று மதுரை - நெல்லை - மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலம் முன்பாக 'அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும், 70வயது முடிந்த ஓய்வூதிர்களுக்கான ஓய்வூதியத்தை 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதிர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின்போது, "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது" எனக்கூறி, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை ஆர்பாட்டத்தினர் எழுப்பினர்.
இதேபோல நெல்லையில், தமிழக அரசு அறிவித்த நிதிநிலை பட்ஜெட்டில், 'அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டதை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 'மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், கோரிக்கை அட்டை அணிந்து இன்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 'ஜூலை 1, 2021 முதல் மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்' உள்ளிட்ட வருவாய் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று மாலை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டமும் நடைபெறுகிறது.
செய்தியாளர்கள்: மணிகண்டபிரபு | நாகராஜன் | ராஜாராம்