
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கட்சியை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், விரைவில் தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வரும் அவர், கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் அவர் விவாதிக்க உள்ளார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பின் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.