Published : 13,Aug 2021 05:33 PM

தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசுப்பள்ளி - ஆசிரியையின் அசத்தல் முயற்சி

madurai-private-school-getting-appreciation

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர், கிராம மக்கள் உதவியுடன் சொந்த செலவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைத்துள்ளார். சிதிலமடைந்து கிடந்த பள்ளிக்கட்டடங்களை புதிய கட்டடங்களாக்கியதோடு, மாணவர் சேர்க்கையையும் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.

வண்ணங்களில் மின்னும் ஓவியங்கள், குழந்தைகள் விளையாடும் சாதனங்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் என தனியார் பள்ளிக்கான அத்தனை அடையாளங்களுடன் இருக்கிறது அந்தப் பள்ளி. உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியில் உள்ள அந்தப் பள்ளி தனியார் பள்ளி அல்ல. அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி. 1938 ஆம் ஆண்டு கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆதிக்கத்தால் மாணவ - மாணவியரின் வருகை குறைந்தது, பள்ளியின் கட்டமைப்பு வசதிகளும் சிதிலமடைந்தது.

image

இவ்வாறான சூழலில் 2017 ஆம் ஆண்டுக்கு இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தவர்தான் முருகேஸ்வரி. பள்ளியின் தரம், மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டங்களை நடத்தியுள்ளார். முதலில் பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்து தனது சொந்தப் பணம் 2 லட்சத்தை போட்டு பணிகளைத் தொடங்கியுள்ளார். இதையறிந்த முன்னாள் மாணவர்களும், கிராம மக்களும் 3 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுக்க, தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் 10 லட்சம் ரூபாயுடன் புத்துயிர் பெற்றது முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி.

தரமான கட்டடம், சிறந்த இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்சாதன வசதி கொண்ட இரு வகுப்பறைகள் என இப்பள்ளி ஜொலிக்கிறது. நவீன கழிவறையும், விளையாட்டுப் பூங்காவும் இப்பள்ளியில் உண்டு. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாறிவிட்டதால், முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் மாணவர் சேர்க்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

image

கேள்விக்குறியாக இருந்த அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் எதிர்காலத்தை ஆச்சர்யக்குறியாக மாற்றியுள்ளார் தலைமையாசிரியை முருகேஸ்வரி. முன்னேற்றத்தை நோக்கிய பார்வையில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் இந்த தலைமை ஆசிரியை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்