ரவி சாஸ்திரி வெளியே? ராகுல் டிராவிட் உள்ளே? - தொடங்கும் புதிய அத்தியாயம்...

ரவி சாஸ்திரி வெளியே? ராகுல் டிராவிட் உள்ளே? - தொடங்கும் புதிய அத்தியாயம்...
ரவி சாஸ்திரி வெளியே? ராகுல் டிராவிட் உள்ளே? - தொடங்கும் புதிய அத்தியாயம்...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளதாகவும், அந்த பதவியில் ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் உள்ள ரவி சாஸ்திரியுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை என சொல்லப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகுல் டிராவிட் உள்ளார். இந்தியாவுக்கான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி, எதிர்கால இந்திய அணியை வலுப்படுத்தும் பொறுப்பு இந்த அகாடமிக்கு உண்டு. அந்தப் பதவிக்கு ராகுல் டிராவிட் வந்தபின் ஏராளமான துடிப்புமிக்க இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர். இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்ததையடுத்து, ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்ப டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள பிசிசிஐ-யிடம் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக லண்டனில் உள்ள ரவி சாஸ்திரியுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது தலைமைப் பயிற்சியாளர் பதவி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்புக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்தாலும், ரவி சாஸ்திரி விலகினால் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வயது வரம்பு 60ஆக இருக்கும் நிலையில், தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரியின் பதவிக் காலத்தில் 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரையும், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com