Published : 09,Aug 2017 05:08 AM
"கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள், இல்லை.... வங்கி வேலையை விடுங்கள்"

கர்நாடகாவில் பணியாற்றும் பிற மாநில வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் 6 மாதத்திற்குள் கன்னடம் கற்றுக் கொள்ளவில்லையெனில் வேலையை விட்டு அனுப்பப்படுவர் என கர்நாடக மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகா மாநில கிராமப்புறங்களில் உள்ள தேசிய, தனியார் வங்கிகளின் ஊழியர்கள் கன்னடம் மட்டுமே அறிந்த மக்களுடன் புழங்க வேண்டியிருப்பதால் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கர்நாடக மேம்பாட்டு ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்களும் கன்னட மொழியை அவசியமாக கற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கன்னடம் பேசாத ஊழியர்கள் அம்மொழியை கற்பதற்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கால அவகாசத்தில் மொழியை கற்காத வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.