பாஜகவை கடுப்பேற்றும் 'கேலா ஹோப்' முழக்கம் - மம்தா மீண்டும் கையிலெடுத்த பின்னணி

பாஜகவை கடுப்பேற்றும் 'கேலா ஹோப்' முழக்கம் - மம்தா மீண்டும் கையிலெடுத்த பின்னணி
பாஜகவை கடுப்பேற்றும் 'கேலா ஹோப்' முழக்கம் - மம்தா மீண்டும் கையிலெடுத்த பின்னணி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தவுள்ள 'கேலா ஹோப்' தினத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. இந்த 'கேலா ஹோப்' குறித்தும், அதற்கு பாஜக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கும் பின்னணியையும் சற்றே விரிவாக பார்க்கலாம்.

மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் மம்தா பானர்ஜி வரும் 16-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 'கேலா ஹோப் திவாஸ்' கொண்டாட திட்டமிட்டுள்ளார். ''இளைஞர்களிடையே கால்பந்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இன்றைய தினத்தில் மாநிலத்தில் உள்ள 25,000 கிளப்புகளுக்கு 50,000 கால்பந்துகளை விநியோகிக்க இருக்கிறோம். இந்த கிளப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க இருக்கிறார் மம்தா" என்று இந்த நாளுக்கான விளக்கம் கொடுக்கிறார்கள் திரிணாமூல் தொண்டர்கள்.

அவர்களின் கூற்றுப்படியே, இந்த நாள் இளைஞர்களிடையே கால்பந்தை ஊக்குவிப்பதாக இருந்தாலும், இந்த 'கேலா ஹோப்' முழக்கத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் தாக்கங்களை யாரும் மறந்துவிட முடியாது.

'கேலா ஹோப்' என்ற வார்த்தையின் அர்த்தம் 'தொடங்கியது விளையாட்டு' அல்லது 'விளையாட்டு நடக்கும்' என்பதாகும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மம்தாவும், அவரின் திரிணாமூல் காங்கிரஸும் இந்த 'கேலா ஹோப்' கோஷத்தை பெருமளவு பயன்படுத்தினர். பாஜகவுக்கு எதிராக 'விளையாட்டு தொடங்கியது' என்ற பொருள்பட இந்த கோஷம் பரப்பப்பட்டது. இந்த கோஷத்தை முதன்முதலில் வங்கதேசத்தின் அவாமி லீக் எம்.பி ஷமிம் ஒஸ்மான் சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தினார். என்றாலும் மேற்கு வங்கத்தில் இதனை பிர்பும் மாவட்டத்தின் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மோண்டால் மற்றும் இளைஞர் கட்சித் தலைவர் தேவாங்சு பட்டாச்சார்யா போன்றோர் பயன்படுத்த தொடங்கினர்.

இவர்கள் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்தில் 'கேலா ஹோப்' கோஷத்தை எழுப்பி ''விளையாட்டு நடக்கும். இது ஆபத்தான விளையாட்டாக, போர்க்களத்தில் விளையாடப்படும்" என்று இளைஞர்கள் மத்தியில் முழங்க நல்ல வரவேற்பை பெற்றது. மறுபுறம், பாஜக தரப்பு இந்த கோஷத்தால் கோபத்தை வெளிப்படுத்தினர். "திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தை பங்களாதேஷாக மாற்ற விரும்புகிறது" என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுவேந்து ஆதிகாரி பேசினார். ஆனால் பாஜகவின் கோபம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியமைத்தார் மம்தா. இந்தநிலையில்தான் தேர்தல் முடிந்த பின் தற்போது 'கேலா ஹோப்' கோஷத்தை கையில் எடுத்துள்ளார் மம்தா.

இந்தமுறையும் பாஜக எதிர்வினை ஆற்றியிருக்கிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி 'கேலா ஹோப் நாள்' கொண்டாடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த நாள் முகமது அலி ஜின்னாவின் 'நேரடி நடவடிக்கை நாள்' என்ற விஷயத்தை வேறுவிதமாக திசை திருப்பியது. 1946-இல் இதே நாளில்தான் பாகிஸ்தான் எனும் தனி நாட்டைப் பெறுவதற்காக கொல்கத்தாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட, அதுவே கொல்கத்தா இந்து - முஸ்லிம் படுகொலை சம்பவமாக அமைந்தது. கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர். 1,00,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். வரலாற்றில் கருப்பு நாளாக அமைந்த இந்த தினத்தில் 'கேலா ஹோப் நாள்' கொண்டாடப்படுகிறது என்று பாஜக தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

மம்தாவின் திரிணாமூல் தரப்போ, 1980-களில் கொல்கத்தாவின் முன்னணி கிளப்புகளான மோஹுன் பாகன் மற்றும் கிழக்கு வங்காளம் இடையேயான போட்டி முடிவடைந்த பின்னர், ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 கால்பந்து ரசிகர்கள் மரணமடைந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இதனால், கொல்கத்தாவில் தற்போது இதனை சுற்றிய அரசியல் சர்ச்சைகள் பெருகி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இதே 'கேலா ஹோப்' கோஷத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 2022-ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் பொருட்டு கையிலெடுத்துள்ளார். மேலும், மம்தாவும் தனது பங்கிற்கு பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை அழைத்து, இந்த முழக்கத்தை பின்னணியாக வைத்து இந்தியில் ஒரு பாடலை எழுத கேட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாகரத்துக்கு எதிர்வினையாற்றும்போதும் திரிணாமுல் எம்.பி.க்கள் இந்த கோஷத்தை எழுப்பி வருகின்றனர். மம்தாவின் சமீபத்திய ஐந்து நாள் டெல்லி பயணத்தின் போதும் தலைநகரில் இந்த முழக்கம் பரவலாக எழுப்பப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது எதிர்கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டார் மம்தா. இந்த நிகழ்வையும் 'கேலா ஹோப்' விஷயத்தை முடிச்சுப்போட தொடங்கியிருக்கிறார்கள் அவரின் நெருங்கிய வட்டாரங்கள். ஆகஸ்ட் 2 ஆம் தேதி கேலா ஹோப் திவாஸ் அறிவிக்கப்பட்ட மேடையில் இருந்து கூட்டத்திற்கு கால்பந்துகளை வீசும்போது மம்தா "விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அந்த விளையாட்டுக்குள் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது" என்றார். இதன் உள் அர்த்தம், டெல்லியில் மம்தா நடத்திய சந்திப்புகள் வரும் காலங்களில் மோடி, அமித் ஷா அணிக்கு பல சிக்கல்களை கொடுக்க காத்திருக்கிறது என்பதே ஆகும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

- மலையரசு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com