[X] Close

சக் தே இந்தியா! - ஹாக்கி வீராங்கனை குடும்பம் சந்தித்த கொடூரமும், சாதிய வன்மத்தின் உச்சமும்

சிறப்புக் களம்

Vandana-Katariyas-Family-Attacked-for-Caste-Identity-after-lndia-Lost-to-Argentina-in-Olympics-Semi-final

சாதிய வன்மம் ஒரு தேசிய வியாதியாக இந்தியாவில் பரவிக் கொண்டிருப்பதை மீண்டும் ஒருமுறை உணர முடிகிறது. இந்தப் போக்கை ஒழிக்க பலரும் பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பங்கேற்று விளையாடும் வீரர்களையும் சாதிய ரீதியாக சிலர் வன்மம் பேசி வருவது சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதுவும் இதோ இந்த டோக்கியோ ஒலிம்பிக் சீசனில்.


Advertisement

136.64 கோடி பேர் வசிக்கின்ற நாடு இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு என உலகம் போற்றி வருகிறது. இருப்பினும் இங்கு மதம், இனம், மொழி, சாதி என பலவற்றை மேற்கோள் காட்டி பிரிவினைவாதம் தூண்டப்பட்டு வருகிறது. அது தனி நபர் லாபத்துக்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் கூட இருக்கலாம். 

அந்த 136.64 கோடி பேரில் சிறந்த 11 வீராங்கனைகள் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கியில் விளையாடி வருகின்றனர். குரூப், காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அவர்களால் அரையிறுதியில் வெற்றி பெற முடியவில்லை. போராடி தோல்வி கண்டனர்.


Advertisement

image

விளையாட்டில் வெற்றி, தோல்வி இயல்பு என்பது அதை ஆத்மார்த்தமாக ரசிப்பவர்களுக்கு தெரியும். ஆனால் சில விஷமிகள், மகளிர் ஹாக்கி அணியின் ஒற்றைப் போட்டியின் தோல்விக்கு சாதிய சாயம் பூசிவருகின்றனர். 

‘இந்திய அணியில் பட்டியலினத்தை சேர்ந்த வீராங்கனைகள் கணிசமாக இடம்பெற்றிருப்பதே தோல்விக்கு காரணம்’ என இந்த தோல்விக்கு நூதன காரணம் கண்டுபிடித்துள்ளனர். 


Advertisement

யார் அவர்கள்? என்ன செய்தார்கள்?  

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்று தற்போது ஒலிம்பிக்கில் விளையாடி வருபவர் வந்தனா கட்டாரியா. முன்கள வீராங்கனை. நடப்பு ஒலிம்பிக்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியவர். அதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சார்பில் இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனையானார். 

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரை அடுத்துள்ள ரோஷனாபாத் கிராமம்தான் அவரது பூர்விகம். அர்ஜென்டினா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை அவரது குடும்பத்தினர் அனைவரும் கிராமத்து வீட்டில் இருந்தபடி பார்த்துள்ளனர். இந்திய அணி தோல்வியை தழுவியதும் அவர்களது வீட்டு வாசலில் வெடி வேட்டுச் சத்தம் விண்ணை முட்டியுள்ளது. என்ன நடந்தது என பதறியபடி வெளியே வந்து அவர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சாதியை சார்ந்த இருவர் உற்சாகமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியை கொண்டாடியுள்ளனர். 

image

அதோடு இந்திய அணியில் பட்டியலினத்தை சேர்ந்த வீராங்கனைகள் கணிசமாக இடம் பெற்றிருப்பதே தோல்விக்கு காரணம் என அந்த விஷம் கக்கும் பேச்சையும் அவர்கள் பேசியுள்ளனர். 

அதைக் கேட்டு வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளனர் வந்தனாவின் குடும்பத்தினர். இந்த தகவல் காவலர்களின் காதுகளுக்கு எட்ட, சம்பவ இடத்திற்கு விரைந்து இந்தச் செயலில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனிப்பட்ட சிலரின் சாதிய வன்மத்தால் தேசிய விளையாட்டுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஹாக்கியில் சர்வதேச அளவில் அழுத்தமாக தங்களது தடத்தை பதிப்பதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வெற்றி பெறுவதற்காக மன உறுதியுடன் தயாராகி வரும் சூழலில், அவர்களுக்கு கோடிக்கணக்கான மக்கள் ஊக்கமளித்து வரும் சூழலில், இப்படி ஒரு சாதிய கோரமுகம் வெளிப்பட்டுள்ளது, சமகால இந்தியாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டுவதாகவே அமைந்திருப்பது வேதனைக்குரிய நிஜம்.

அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவின் சாதி என்ன? என்பது குறித்து அறிந்துக்கொள்ள கூகுள் தேடலில் ஈடுபட்ட சாதிய சரித்திரமும் இங்கு உண்டு.

இந்தியாவில் சாதிய வன்மங்களுக்கு எதிராக சட்டங்களைக் கடுமையாக்குவது இப்போதைய அவசர தேவையாக உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டும் விதமாகவே சமீபத்திய இந்த நிகழ்வையும் அணுக வேண்டியிருக்கிறது.

சக் தே இந்தியா!


Advertisement

Advertisement
[X] Close