“என் காதுபட அத்தனை எதிர்மறை கருத்துக்களை கேட்டிருக்கேன்”- வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

“என் காதுபட அத்தனை எதிர்மறை கருத்துக்களை கேட்டிருக்கேன்”- வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி
“என் காதுபட அத்தனை எதிர்மறை கருத்துக்களை கேட்டிருக்கேன்”- வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

புதிய தலைமுறை - நேர்படப் பேசு 'டோக்கியோ ஒலிம்பிக்…இந்தியா பெற்றதும்… கற்றதும்…' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி பகிர்ந்து கொண்ட கருத்து. 

“பள்ளி படிக்கின்ற போதே எனக்கு விளையாட்டில் ஈடுபாடு அதிகம். நான் பயிற்சி பெறக்கூடிய ஒரு விளையாட்டாக எனக்கு வாள்வீச்சு விளையாட்டு அறிமுகமானது. அது குறித்து அறிந்து கொண்டதும் இந்த விளையாட்டை தான் நாம் ஆட வேண்டும் என முடிவெடுத்தேன். 

பதினோரு வயதில் வாள்வீச்சு விளையாட்டில் பயிற்சி பெற தொடங்கினேன். பயிற்சி பெற தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே தமிழ்நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்றேன். சப் ஜூனியர் பிரிவில் அந்த பதக்கத்தை வென்றிருந்தேன். அது தான் தமிழ்நாட்டுக்கு வாள்வீச்சு விளையாட்டில் கிடைத்த முதல் தங்கம். ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு வந்தது அதற்கு பிறகு தான். 

அப்படியே படிப்படியாக முன்னேறினேன். அண்டர் 14, அண்டர் 17, அண்டர் 23 மற்றும் சீனியர் என முன்னேறி தான் ஒலிம்பிக் விளையாட தகுதி பெற்றேன். எனது கனவை நான் அடைய பெற்றோர்கள் எனக்கு துணையாக இருந்தனர். 

போட்டிகளில் பங்கேற்க, விளையாட்டுக்கான கருவிகளை வாங்க என நிறைய செலவுகள் இதில் உள்ளன. நிதி நெருக்கடியை கடந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இதையெல்லாம் கடந்து தான் ஒலிம்பிக் விளையாட்டில் வாள்வீச்சு விளையாட்டில் தகுதி பெற்று இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் விளையாடினேன். 

இப்போது இந்திய அளவில் பரவலான மக்களிடையே இந்த விளையாட்டு சென்றடைந்துள்ளது. ஒலிம்பிக் விளையாடுவதற்கு முன் என் காதுபட பேசி வந்த எதிர்மறை பேச்சுக்கள் எல்லாம் நேர்மறையானதாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுவிட்டு வந்த பின் மாறியுள்ளதாக பார்க்கிறேன். பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தற்போது அனைத்து விளையாட்டுக்கும் ஆதரவு பெருகி உள்ளதாக கருதுகிறேன். இனி அனைத்து விளையாட்டுக்கும் மக்களின் ஆதரவு இருக்கும் என கருதுகிறேன். 

மேல்நாட்டு தரத்திற்கு நமது விளையாட்டுத் தரம் உயர வேண்டும். குறிப்பாக வாள்வீச்சு விளையாட்டுக்கு அது அவசியம் என கருதுகிறேன். இனி வரும் நாட்களில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்று அனுபவங்கள் இருக்க வேண்டும். அது நடந்தால் நிச்சயம் மூன்று, நான்கு ஆண்டுகளில் சர்வதேச தரத்திற்கு வாள்வீச்சு விளையாட்டு திறன் வளர்ந்து விடும். 

வீரர்களுக்கு மைன்ட் செட் செம ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களது உடலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த உந்து சக்தியாக இருக்கும். 

மேரி கோம் மாதிரியான இன்ஸ்பிரேஷன் கொடுக்கக்கூடிய வீராங்கனைகள் எதிர்வரும் காலத்தில் இந்தியா சார்பில் பல வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டில் வெளிக்கொணர உதவும் என கருதுகிறேன். இதில் ஒன்று என்னவென்றால் அப்படி எழுச்சி பெரும் வீரர்களுக்கு முறையான ஆதரவும், பயிற்சியும், அரவணைப்பும் இருக்க வேண்டும். அந்த துணையை அரசு, பெற்றோர், குடும்பம் சமூகம் கொடுக்க வேண்டும். நிறைய ஊக்கத் தொகையும், அங்கீகாரமும் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மாற்றம் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com