Published : 03,Aug 2021 09:19 PM

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ்

Rahul-urges-Opposition-to-unite-to-fight-back-party-in-power-at-Centre

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். காங்கிரஸின் இந்த முயற்சி 2024 வரை தொடருமா என்பது பற்றியும், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட இலக்கு என்ன என்பது பற்றியும் இங்கு தெரிந்துகொள்வோம்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸின் இந்த முயற்சியின் தொடக்கமாக 15 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றது மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ். ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் விரைவில் இணையும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் காங்கிரஸூடனான இந்த ஒற்றுமை, 2024-ம் ஆண்டு வரையிலும் தொடரும் என ஜோதிமணி எம்.பி. உறுதிபட தெரிவித்துள்ளார்.

image

நாடாளுமன்றத்துக்கு வெளியில் மட்டுமன்றி, உள்ளேயும் தங்களின் ஒற்றுமையை காட்டுகின்றன எதிர்க்கட்சிகள். அந்த வகையில் நாடாளுமன்றத்திற்குள் பதாகைகள், முழக்கங்கள் என எதிர்க்கட்சிகளின் அமளிகள் அனல்பறக்கின்றன. இவர்களை எதிர்க்க முடியாமல் திணறுகிறது மக்களவை, மாநிலங்களவையில் உள்ள தனிப்பெரும்பான்மையால், எந்த மசோதாவையும் எளிதாக கடந்து செல்லும் மத்திய அரசு. மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே மீதுமுள்ளதால், மக்களவையும் மாநிலங்களவையும் சுமுகமாக செயல்பட மத்திய அரசு புதிய சமாதான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சியினால் நடந்த அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். கலந்துகொண்ட 15 கட்சிகளின் சார்பிலும் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

image

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருந்தால் நமது குரலை அரசால் ஒடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். கூட்டத்தில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தே விவாதித்திக்கப்பட்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதில் வைத்ததுதான் இந்த ஒற்றுமை கூட்டம் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்