Published : 02,Aug 2021 05:42 PM
ஓசூர்: மின் இணைப்பை மாற்றி சீரான மின்சாரம்; மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

ஓசூர் அருகே மின் இணைப்பை மாற்றி சீரான மின்சாரம் வழங்கிய சிப்காட் மின்வாரியத்துக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெரிய எலசகிரி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகலூர் எல்காட் பகுதியிலிருந்து இந்த கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், சீராக மின்சாரம் வினியோகம் செய்யாததால், குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதாகி சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பெரிய எலசகிரி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, சிப்காட் பகுதியில் இருந்து இந்த கிராமத்திற்கு சீரான மின்சாரம் வழங்கவேண்டுமென சிப்காட் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற மின்வாரிய அதிகாரிகள் பெரிய எலசகிரி கிராமத்திற்கு பாகலூர் எல்காட் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த மின்சாரத்தை துண்டித்து, சிப்காட் பகுதியில் இருந்து மின்சார இணைப்பு வழங்கினார்.
இதனால் தற்போது அந்த கிராமத்தில் சீரான மின்சாரம் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிராம மக்கள் நிம்மதியாக உள்ளனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் சீரான மின்சாரம் வழங்கிய சிப்காட் மின்வாரிய அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.