[X] Close

வாழ்த்து மழையில் பதக்க தேவதை... பி.வி.சிந்து கடந்து வந்த வெற்றிப் பாதை

ஒலிம்பிக்

Indian-badminton-Player-PV-Sindhu-makes-history-at-Olympics-and-Indian-Prime-Minister-President-Rahul-Gandhi-Congrats-her

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து. ரியோ மற்றும் டோக்கியோ என அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள அவரை பிரதமர், குடியரசுத் தலைவர், ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளனர். 


Advertisement

பிரதமர் நரேந்திர மோடி : “பி.வி. சிந்துவின் அற்புதமான ஆட்டத்தினால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். டோக்கியோவில் வெண்கலம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துகள். அவர் நமது நாட்டின் பெருமை. மேலும் இந்தியாவின் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களில் ஒருவர்” என தெரிவித்துள்ளார். 

image


Advertisement

குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த் : “இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பி.வி. சிந்து. இது அவரது அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் புதிய பாதையை அமைத்துள்ளார் அவர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவரை மனதார வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

image

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் : “இந்தியாவிற்காக இரண்டாவது பதக்கத்தை வென்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 


Advertisement

image

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் பிவி சிந்துவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

image

image

image

சிந்து கடந்து வந்த பாதை:

பி.வி.ரமணா - விஜயா தம்பதியரின் மகளான சிந்து, இந்தியா உருவாக்கிய சிறந்த விளையாட்டு ஜாம்பாவான்களில் ஒருவராகவே திகழ்கிறார். தந்தையும் தாயும் தேசிய அளவிலான கைப்பந்து வீரர், வீராங்கனை என்பதால், விளையாட்டு ஆர்வம் சிந்துவின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது.

8 வயதில் கோபிச்சந்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்த சிந்து, குறைந்த காலக்கட்டத்திலேயே தம்மை தொழில் ரீதியான விளையாட்டு வீராங்கனையாக பட்டைத்தீட்டிக் கொண்டார். முதன்முதலாக இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்ற அவர், சப் ஜூனியர் பிரிவில் பட்டம் வென்றார்.

2012 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதிக்க, அதே காலகட்டத்தில் சிந்து சர்வதேச தரநிலையில் முதல் இருபது இடங்களுக்குள் முன்னேறினார்.

2019 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வாகை சூடினார். 2017-ல் ஸ்கார்ட்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.

2018 ஆம் ஆண்டு, சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, 2013 ஆம் ஆண்டு டென்மார்கில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2014 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் என சிந்துவின் சாதனை வரலாறு நீளமானது.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற அவர், அரை இறுதி வரை முன்னேறினார். தற்போது, டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே வீராங்கனை என்ற வரலாறை எழுதியுள்ளார்.

மேலும், தனிநபர் பிரிவில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு அடுத்தப்படியாக, இரு பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்தியாவின் பதக்க தேவதையாக கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் மின்னியுள்ள சிந்துவுக்கு தேசத்தின் தலைமை தொடங்கி, மூலை முடுக்குகள் வரை பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement
[X] Close