Published : 29,Jul 2021 05:15 PM

மானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்!

'இயற்கை அனைவரையும் சமபலத்துடன் படைக்கவில்லை; ஆனால், எல்லோருக்கும் சமமான வளங்களையே வழங்கி இருக்கிறது' என்பார்கள். அது முழு உண்மையல்ல என தோன்ற வைக்கிறது சில காட்சிகள். எண்ணெய் வளங்கள் நிறைந்த தேசத்தில் தண்ணீர் இல்லை. தண்ணீர் வெள்ளமென ஓடும் நிலங்கள் சிலவற்றில் உணவு உற்பத்திக்குத் தோதில்லை. உக்கிரமான வெயில், தாங்க முடியாத குளிர் என விதவிதமான நிலப்பரப்புகள். விதவிதமான வாழ்க்கையினை வாழும் மனிதர்கள். இவை அனைத்தையும் தாண்டித்தான் மனிதகுலமானது தன் இனப்பெருக்க சங்கிலி அறுந்துவிடாமல் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது.

image

தென் தமிழகத்தின் பல ஊர்கள் செழிப்புடன் இருந்தன. அதேநேரம் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஊர்கள் வறட்சியானவை. இப்படியான ஊர்களில் பிறந்து வளரும் மனிதர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அல்லது கொஞ்சம் மேம்பட்ட வாழ்வை அணுக இடம்பெயர்தல் நிகழ்கிறது. இன்று நேற்றல்ல... பல ஆண்டு காலமாகவே இப்பகுதியில் தொழில் வாய்ப்புகளும், விவசாய சாத்தியங்களும் குறைவு. அதனால் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்கச் சென்று பிறகு அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டனர். சமீபத்தில் இந்த நிலை இன்னுமே மோசமாகிவிட்டதாகத் தெரிகிறது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலரும் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் ஊர்கள் ஆளரவமற்ற வெற்று நிலமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் நிகழும் கடுமையான வறட்சி மற்றும் குறைவான விவசாய சாத்தியங்கள் போன்ற காரணிகளால் பலரும் தங்களது கிராமங்களை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர். சாலை வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை விசயங்களுக்காகக் கூட பெரிய அளவில் மக்கள் போராடவேண்டிய சூழல் நிழவுவதால் மக்கள் இப்படியான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

image

ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கிய சிவகங்கை பகுதியின் பல கிராமங்களில் தற்போது ஆள்நடமாட்டமே இல்லை. பொங்கல் பண்டிகை, உள்ளூர் திருவிழா, குடும்ப விசேஷங்கள் போன்ற நாள்களில் மட்டுமே சொந்தங்கள், உறவுகள் கூடி மகிழ்கின்றனர். வயதான உள்ளூர்ப் பெரியவர்கள் சிலர் மட்டுமே சொந்தமண்ணை விட்டுப் பிரிய மனமின்றி பிடிவாதமாக இருக்கின்றனர்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகள் உள்ளன; 112 கிராமங்களை உள்ளடக்கியது இந்தப் பகுதி. இவற்றில் குன்றாமணியேந்தல், குமிழன் தாவு உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் மட்டுமே இருப்பது துயரம். மக்கள் பயன்படுத்திய ஆட்டுரல், குடிநீர்குழாய், மாடு - கன்றுகள் இல்லாத காலி தொழுவங்கள் மட்டுமே கண்ணீர் சாட்சிகளாக எஞ்சிக் கிடக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் செழிப்பாக இருந்த கிராமம், குன்றாமணியேந்தல். மானாமதுரையில் இருந்து இடைக்காட்டூர், முத்தனேந்தல், வாகுடி, குன்றாமணியேந்தல் வழியாக திருச்சுழிக்கு வண்டிப்பாதை ஒன்று இருந்தது. இப்போதும் அது வண்டிப்பாதையாகவே இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை போக்குவரத்து வசதிகள் கூட வந்துசேராததால் பலரும் இக்கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். விசேஷ நாள்களில் மட்டுமே வெளியூரிலிருந்து சொந்த கிராமத்திற்கு வந்து மக்கள் கூடுகின்றனர்.

image

இதற்கடுத்து குமிழன்தாவு. பெருபான்மையாக கிருஸ்தவ மக்களைக் கொண்ட இக்கிராமத்தைத் தாண்டித்தான் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் செல்ல முடியும். பங்குனி திருவிழாவின்போது பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு இப்பகுதியில் அன்னதானம் வழங்கப்படும். தவிர, இக்கிராமத்தில் பலரும் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறவர்கள். இப்படி இருந்த இக்கிராமத்தின் வீடுகள் தற்போது மனிதர்களற்று தனித்துவிடப்பட்டிருக்கின்றன.

குமிழன்தாவு கிராமமக்கள் பலரும் மதுரைக்கு இடம்பெயர்ந்து விட்டனர். வருடம்தோறும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாள்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். மற்றபடி ஊரின் தொடர்பே இல்லாமல் உள்ளனர். இவை போலவே அப்பகுதியின் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறண்டு கிடப்பதால் இடம்பெயர்வுகள் நடந்தவண்ண உள்ளன.

'நிற்பன வீழும், நகர்வன வாழும்' என்பார்கள். ஆனால் என்ன மாதிரியான சூழலில் மனிதர்கள் இடம்பெயர்தல் நிகழ்கிறது என்பதனைப் பொறுத்தே, அது வளர்ச்சிக்கான நகர்வா அல்லது சரிவின் துவக்கமா என்பதைக் கூற முடியும். கெட்டும் பட்டணம் போகலாம்... ஆனால், சொந்த ஊரில் வாழ வழியின்றி பட்டணம் போதல் என்பதே துயரத்தின் துல்லியம். வேரை இழக்கும் மரங்கள் சிறு தூத்தலுக்கும் தாங்காது என்பதே நிதர்சன உண்மை.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்