Published : 28,Jul 2021 07:28 PM

பூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்!

Medal-for-the-Tokyo-Olympics-made-of-metal-collected-from-recycled-electrical-devices-and-Japan-followed-novel-way-to-make-medals

ஒட்டுமொத்த உலகமும் ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு விளையாட்டிலும் வீரர்களும், வீராங்கனைகளும் தங்களது அபாரமான ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்பை வெளிக்காட்டி வருகின்றனர். அதன் மூலம் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதே அவர்களது விருப்பம். 

image

சுமார் 10305 வீரர்களும், வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மொத்தம் 33 விதமான விளையாட்டுகளில் 339 ஈவெண்டுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இந்த ஈவெண்டுகளில் டாப் மூன்று இடங்களில் பிடிக்கும் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் ஒலிம்பிக் விளையாட்டின் மரபுப்படி கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்கை நடத்துகின்ற நாடுகளுக்கே ஒலிம்பிக் பதக்கங்களை வடிவமைக்கும் பணியும் ஒப்படைக்கப்படுகிறது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கத்தை வடிவமைக்கும் பணியை ஜப்பான் கவனித்தது. 

பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைத்துள்ள ஜப்பான்!

3,77,975 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது ஜப்பான் நாடு. 12.53 கோடி பேர் வசித்து வரும் நாடு. இயற்கை சீற்றங்கள், அணு உலைப் பேரழிவு, உலகப்போர் மாதிரியானவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு. இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்து நின்று முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அனைத்திலும் புதுமையை கடைப்பிடித்து வருவது தான். அந்த வகையில் ஒலிம்பிக் பதக்கத்தை வடிவமைக்கும் பணியிலும் புதுமையை கடைப்பிடித்துள்ளது. 

image

மின் கழிவுகளிலிருந்து பதக்கம்!

பேரண்டத்தையே தற்போது பீதியில் ஆழ்த்தியுள்ளது மின் கழிவுகள்தான் (இ-வேஸ்ட்). இந்த மின் கழிவுகளில் அதிகமாக இருக்கும் ஈயம், காட்மியம், பெரில்லியும், சிலிகான் என நச்சுத்தன்மை வாய்ந்த மெட்டிரியல்களில் இருந்து தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சூழல் சார்ந்த ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் கொட்டப்படும் இ-வேஸ்ட்களில் வெறும் இருபது சதவிகிதம் தான் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், மின் கழிவுகளில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தை பிரித்தெடுத்து அதை கொண்டு பதக்கத்தை தயாரித்துள்ளது ஜப்பான். 

இதற்காக 2017 வாக்கில் மின் கழிவுகளை சேகரிக்கும் நோக்கில் Tokyo 2020 Medal Project என்ற திட்டத்தை அமல்படுத்தியது டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு. இதற்காக ஜப்பான் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு மையம் மற்றும் என்.டி.டி டோகோமோ என்ற நிறுவனமும் உதவியது. 

2017 ஏப்ரல் தொடங்கி 2019 மார்ச் வரையில் பொது மக்களிடமிருந்து மின்சாதன பொருட்களை திரட்டியது ஜப்பான். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் என இரண்டு விளையாட்டுகளுக்கும் சேர்த்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 5000 பதக்கங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்தது ஜப்பான். அவையனைத்தும் மக்களிடமிருந்து பெறப்பட்ட செல்போன் மாதிரியான சிறிய அளவிலான மின்சாதன பொருட்களில் இருந்து உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டது.  

image

வெற்றி பெற்ற திட்டம்!

ஜப்பான் நகராட்சி அதிகாரிகள் 78,985 டன் மின் கழிவுகளையும், என்.டி.டி டோகோமோ 6.21 மில்லியன் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களையும் சேகரித்து கொடுத்தன. அதிலிருந்து 32 கிலோ தங்கம், 3500 கிலோ வெள்ளி மற்றும் 2200 கிலோ சேகரிக்கப்பட்டுள்ளது. டயாமீட்டரில் 85 மில்லி மீட்டரும், தடிமனில் 12.1 மில்லி மீட்டரும் இருக்கும் வகையில் பதக்கங்கள் வடிவமக்கைப்பட்டன. வடிவமைப்பாளருக்கான தேடலும் நாடு தழுவிய போட்டியாக நடத்தப்பட்டு இறுதியில் ஜுனிச்சி கவனிஷி (Junichi Kawanishi) என்ற டிசைனர் வடிவமைத்த பதக்கம் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்களாக வடிவமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இப்படியாக சாமானிய மக்கள் தொடங்கி பலரது வியர்வையில் உருவான ஒலிம்பிக் பதக்கம் இப்போது வெற்றியாளர்களை ஒலிம்பிக் அரங்கில் கவுரவித்து வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்