
தருமபுரியில் நிலத் தகராறால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரை, ஊர் பஞ்சாயத்தை கூட்டி கட்டப் பஞ்சாயத்து செய்து ரூ.2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் அப்பகுதி கிராம மக்கள். அந்த அபராதத் தொகையை செலுத்தும் வரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து, அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனரும்கூட. ஊர் மக்களின் இந்த மோசமான நடவடிக்கையை எதிர்த்து, அந்த விவசாயி தனது விவசாய நிலத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த இடும்பன் என்பவருக்கும், உறவினரான கிருஷ்ணன் என்பவரது குடும்பத்தினருக்கும் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க கிராமத்தில் உள்ள ஊர் கவுண்டர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இடும்பன் மற்றும் அவரது சகோதரர் ஞானவேல், தந்தை கோவிந்தன் ஆகிய 3 பேரையும் அழைத்து ஊரில் பஞ்சாயத்து பேசியுள்ளனர்.
இந்த பஞ்சாயத்தில் இடும்பன் குடும்பத்தாரிடம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்து உள்ளனர். மேலும் அபராதமாக ரூ.2 லட்சம் கொடுத்தால் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும் எனவும், அதுவரை ஊரில் இருக்கக் கூடாது என ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனால் பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் விவசாயி இடும்பன். ஊருக்குள் வரக்கூடாது என்றும் கூறியதனால், கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார் அவர். இந்த விவகாரம் தொடர்பாக இடும்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கும் காவல் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த இடும்பன் அவரது விவசாய நிலத்தில், குடும்பத்துடன் சேர்ந்து, தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தர்ணா போராட்டம் செய்யவிருப்பதாக கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சே.விவேகானந்தன்