விஸ்வரூபம் எடுத்த அசாம் - மிசோரம் எல்லை பிரச்னை: 6 போலீஸ் உயிரிழப்பு; சிஆர்பிஎஃப் குவிப்பு

விஸ்வரூபம் எடுத்த அசாம் - மிசோரம் எல்லை பிரச்னை: 6 போலீஸ் உயிரிழப்பு; சிஆர்பிஎஃப் குவிப்பு
விஸ்வரூபம் எடுத்த அசாம் - மிசோரம் எல்லை பிரச்னை: 6 போலீஸ் உயிரிழப்பு; சிஆர்பிஎஃப் குவிப்பு

அசாம்- மிசோரம் எல்லை பிரச்னையில் ஏற்பட்ட வன்முறையில் 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அசாமின் கச்சார் மற்றும் மிசோரமின் கோலாசிப் மாவட்டத்திற்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக அய்தலாங் நார் என்ற பகுதியை அசாம் காவல்துறையினர், கடந்த ஜூன் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நாள் முதலாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

எல்லைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பணியில் இருந்த அசாம் காவல்துறையினர் மீது கம்பு, கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். மிசோரம் காவல்துறையினர் இயந்திர துப்பாக்கிகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அஸாம் அரசு குற்றம்சாட்டியுள்ளது. பின்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், அசாம் மாநில காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எல்லையில் இருந்த விவசாயிகளின் குடிசை வீடுகள், அரசு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சாலையில் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை மோசமானதால் அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருமாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தாக்குதலில் காவல்துறையினர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அசாம் முதல்வர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வன்முறைக்கு யார் காரணம் என மிசோரம் மாநில முதலமைச்சர் ஜோரம்தங்காவும், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.அதேநேரத்தில் அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனிடையே, இரு மாநில முதல்வர்களும் வன்முறை நிகழ்வதை தடுக்க அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com