
கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசியை திருடிச் சென்ற செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 100 பேருக்கு செலுத்தும் அளவுள்ள மருந்தை வீட்டுக்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அய்யனார் நகரில் வசிக்கும் தனலட்சுமி என்பவர் கரூர் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை மருத்துவமனையில் இருந்து திருடிச் சென்று வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு பொதுமக்களுக்கு செலுத்துவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தலைமையிலான சுகாதாரத்துறையினர் தனலட்சுமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 8 குப்பி கோவிஷீல்டு மருந்து அங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து தடுப்பூசி திருட்டு தொடர்பாக வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். இதனிடையே கரூர் நகராட்சி ஆணையர் செவிலியர் தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தடுப்பூசி திருட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.