[X] Close

‘சர்வதேச போட்டிக்கு பையன் தேற மாட்டார்’: விடாப்பிடியாக சாதித்த தீபக் சஹாரின் வெற்றிக்கதை!

விளையாட்டு,சிறப்புக் களம்

Indian-Cricket-Player-Deepak-Chahar-s-Success-Story-who-recently-played-match-winning-innings-against-Sri-Lanka-in-the-ODI

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற கை கொடுத்துள்ளது தீபக் சஹாரின் பேட்ஸ்மேன்ஷிப். ஆஸ்தான பவுலரான அவர் பேட்டும் கையுமாக இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார் சாகச நாயகன் சஹார். 


Advertisement

சரிவிலிருந்து அணியை மீட்ட மீட்பர்!

image


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறியது இந்தியா. களத்தில் தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் என இரண்டு பவுலர்கள் பேட் செய்ய வேண்டிய நிலை. இந்தியாவின் வெற்றிக்கு 83 ரன்கள் தேவைப்பட்டது. 

போட்டியை வென்று கொடுக்கும் மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்கள் எல்லாம் அவுட்டாகி பெஞ்சில் அமர்ந்திருக்க, ‘இனி இந்தியா அவ்வளவு தான்’ என முணுமுணுத்தபடி நேரலையில் மேட்ச் பார்த்து வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது தீபக் சஹாரின் ஆட்டம். 

இந்த போட்டியில் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார் அவர். அந்த ரன்கள் ஏதோ அவரது பேட்டில் பட்டு அதிரஷ்டத்தில் வந்தது கிடையாது. ஒவ்வொரு ரன்னுமே களத்தில் அவரது உழைப்புக்கு கிடைத்த ஊதியம். இலங்கை அணியின் அற்புதமான சுழற்பந்து வீச்சை சந்திக்கும் போது அடக்கி வாசித்த அவர் வேகப்பந்து வீச்சை சந்திக்கும் போது ஆர்பரித்து ஆடினார். எந்த இடத்திலும் லூஸ் ஷாட் ஆடவில்லை. அதுவே அவரது இன்னிங்ஸை பில்ட் செய்யவும், அது அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக அமைந்தது. 


Advertisement

image

ஆக்ரா நகரின் மைந்தன்!

90களில் இந்தியாவில் வளர்ந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு கிரிக்கெட் என்றாலே அது சச்சின், கங்குலி, டிராவிட் என இந்த மும்மூர்திகள்தான் அதிகம் நினைவுக்கு வருவார்கள். அதனால் எல்லோரும் பேட்ஸ்மேனாகவே விரும்புவார்கள். ஆனால் ஆக்ராவில் பிறந்த தீபக் சஹாருக்கு பவுலராக வேண்டுமென்ற ஆசை வந்துள்ளது. அதை தனது அப்பாவிடம் சொல்ல, மகனின் கனவுக்காக பந்து வீசி பழக பிட்ச் அமைத்துக் கொடுத்துள்ளார். அதில்தான் தனது பயிற்சியை தீபக் சஹார் தொடங்கியுள்ளார். 

image

கிரேக் சேப்பலின் புறக்கணிப்பு!

மகனின் விளையாட்டு கனவை நிறைவேற்ற ஆக்ராவிலிருந்து தங்களது குடும்ப பூர்வீகமான ராஜஸ்தானுக்கு புலம் பெயர்ந்துள்ளது தீபக் சஹாரின் குடும்பம். 

‘சர்வதேச கிரிக்கெட் களத்தில் பந்துவீசுவதற்கான தகுதி இந்த பையனிடம் இல்லை’ என சொல்லி 2008இல் ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சஹார் விளையாடுவதற்கான வாய்ப்பை தட்டிக்கழித்தார் அப்போதைய ராஜஸ்தான் கிரிக்கெட் அகடாமியின் இயக்குனர் கிரேக் சேப்பல். 

அவரது வார்த்தைகள் தீபக் சஹாரை மனதளவில் பாதித்துவிட கால நேரமெல்லாம் பார்க்காமல் கிரிக்கெட் களத்திலேயே தவமாய் தவமிருந்து பந்துவீச்சாளருக்கு தேவையான சகல நுணுக்கங்களையும் கற்று சர்வதேச கிரிக்கெட் களத்தில் இன்று பந்து வீசி வருகிறார். 

image

தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸும்!

கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார் விளையாடி வருகிறார். அதற்கு காரணம் ரைசிங் பூனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சஹார், வலை பயிற்சியின் போது தோனிக்கு வீசிய பந்துகள். அதன் பின்னர் சென்னை அணியின் பிரதான பவுலர்களில் ஒருவரானார் அவர். இதுவரை ஐபிஎல் அரங்கில் 55 போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். 

2018 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 13 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர் இவர். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். அதன் பலனாக தான் இலங்கைக்கு எதிராக இந்த அரை சதத்தை பதிவு செய்து அணியையும் வெற்றி பெற செய்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close