[X] Close

"அப்போது இந்தியாவின் சுவர்; இப்போது வழிகாட்டி" - உருமாறிய ராகுல் டிராவிட்

சிறப்புக் களம்

From-wall-of-Indian-cricket-now-as-a-coach-a-long-journey-of-Rahul-Dravid

ஒரு காலத்தில் ராகுல் டிராவிட் இல்லாத இந்திய டெஸ்ட் அணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பல இக்கட்டான நேரங்களில் நிலைத்து விளையாடி இந்திய கிரிக்கெட்டின் சுவராக பல போட்டிகளில் அணியை மீட்டுள்ளார். அது ஒரு சில போட்டிகளில் மட்டுமல்ல, ராகுல் டிராவிட் போராடி இந்திய அணியை மீட்ட போட்டிகளின் பட்டியல் மிகப்பெரியது.


Advertisement

ராகுல் டிராவிட் ஓய்வுப்பெற்ற பின்பு, அவர் அளவுக்கு திறன் படைத்த வீரர் இன்னமும் நம் அணியில் இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம். இந்திய அணியில் இல்லை என்றாலும் ஓய்வுக்கு பின்பு 19 வயதுக்குட்பட்டோர் அணி, இந்திய ஏ அணி என ராகுல் டிராவிட் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

image


Advertisement

அவரின் பட்டறையில் தீட்டப்பட்ட ஆயுதங்களாய் பல வீரர்கள் இப்போது இந்திய அணிக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அது ரிஷப் பன்ட் முதல் பிருத்வி ஷா வரை என அந்தப் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராகவும் இருக்கிறார் ராகுல் டிராவிட். இப்போது இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று முதல் வெற்றிக் கனியை சுவைத்து இருக்கிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இருக்கிறது இந்திய அணி. விரைவில் இந்தியாவின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகும் வாய்ப்பு வெகு தூரத்தில் இல்லை என்றே கூறலாம்.

image


Advertisement

ரவி சாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கு முன்பாக ராகுல் டிராவிட்தான் பிசிசிஐயின் முதல் சாய்ஸாக இருந்தது. ஆனால் தன்
குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட விரும்புவதால் அப்போது அந்தப் பொறுப்பை வேண்டாம் என்றார் டிராவிட். ஆனால் இப்போது காலம் கணிந்திருப்பதால் இந்தாண்டு இறுதிக்குள் இந்திய சீனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அடுத்தடுத்து டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவை நடைபெற இருப்பதால் அதில் டிராவிட்டின் பங்கு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் பயணம்

1973-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த ராகுல் டிராவிட், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி சர்வதேச இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அன்று தொடங்கிய அவரது ஆட்டம் 2012-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி எனும் இரண்டு பிரம்மாண்டங்களுக்கு இடையே நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலித்தவர் தான் ராகுல் டிராவிட். ஒரு போட்டியில் சச்சினுடன் கைகோர்த்தும், அடுத்த போட்டியில் கங்குலியுடன் ஜோடி சேர்ந்தும் இந்திய அணிக்காக கடுமையாக போராடியவர்.

image

இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சத்தமின்றி இருந்தது. இதேபோன்று இவரது பேட்டிங்கும் சத்தமின்றியே இருக்கும். கிரிக்கெட்டின் ‘பொறுமை நாயகன்’ என டிராவிட்டை கூறலாம். பேட்டிங்கில் மட்டுமின்றி குணத்திலும் டிராவிட் மிகுந்த பொறுமைசாலிதான். டெஸ்ட் போட்டிகளில் இவரது விக்கெட்டை சாய்ப்பது எப்பேற்பட்ட பவுலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களைகூட, டிராவிட் அலறவிட்டிருக்கிறார். சர்வதேச அளவில் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி என விளையாடியுள்ளா் ராகுல் டிராவிட். 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வினை அறிவித்தார்.

image

ஓய்வு பெற்றபோது பேசிய டிராவிட், கிரிக்கெட்டில் தன்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது என தெரிவித்திருந்தார். அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தந்து, கண்ணியத்தோடு விளையாடி, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பதே தன்னுடைய அணுகுமுறை என்றார். தான் சில சமயங்களில் தோற்றிருந்தாலும், எப்போதும் முயற்சியை நிறுத்தியதே இல்லை என்று கூறியிருந்தார். அதனால், தான் சோகத்தோடு விடைபெற்றாலும், பெருமிதத்தோடும் விடை கொடுப்பதாக அன்று ராகுல் கூறியது அனைவருக்கும் உருக்கத்தைக் கொடுத்தது. இந்த பேச்சு மட்டுமல்ல இதுபோன்ற பல உருக்கமான பேச்சுக்களையும், அழுத்தமான கருத்துகளையும் ராகுல் டிராவிட் பலமுறை தெரிவித்திருக்கிறார்.

image

பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் ‘காத்திருப்பு’ குறித்து ராகுல் ஆற்றிய உரையில், “என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு எனது தலைமையாசிரியர் என்னைக் கிரிக்கெட் ஆட விடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார். தேர்வுகளின்போது அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதியதாகவும், அதே நேரத்தில் ரஞ்சி போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்ததாகவும் கூறினார். டென்னிஸ் பந்தை பதினைந்து கோணங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி பெற்றதாகவும், வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

image

19 வயதிற்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடியபோதும், தன்னால் சீனியர் அணிக்குள் நுழைய முடியவில்லை எனவும், ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தனது நிலையை நினைத்து வருந்தாமல், தன்னுடைய பைக்கில் ஒரு வாசகத்தை எழுதிக்கொண்டதாகவும் ராகுல் குறிப்பிட்டிருந்தார். அந்த வாசகம் என்னவென்றால், “கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை!” என்பதாகும்.

இவ்வாறு ஐந்து வருடம் காத்திருந்திருக்காவிட்டால், அதன்பின்னர் கிரிக்கெட்டில் தான் பெற்ற வெற்றிகளை சந்தித்திருக்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்ததாகவும் டிராவிட் உருக்கமாக தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு, வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் அனைத்து இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்தது.

அத்துடன் வாய்ப்பு கிடைக்காத நாட்களில் தான் பெற்ற டென்னிஸ் பந்தின் பயிற்சியே, பிற்காலத்தில் வார்னே, முரளிதரன், வாசிம் அக்ரம், மெக்ராத், ஆலன் டொனால்ட் போன்ற ஜாம்பவான்களின் பந்துகளை எதிர்கொள்ள உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு வாய்ப்பு கிடைக்காத காலங்களில் இளைஞர்கள் சோர்ந்திருக்காமல், தங்களை தயார் படுத்த வேண்டும் என்பதை உணர்த்தியிருந்தது.


Advertisement

Advertisement
[X] Close