
குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடந்தது. இதில் பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.
மோடி வாழ்த்து:
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வெங்கய்ய நாயுடு, நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்கமுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் நல்ல குடியரசு துணைத்தலைவராக இருப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன். எனது மனது முழுவதும் அவருடன் ஆட்சியிலும், கட்சியிலும் பணியாற்றிய நினைவுகளே உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
அமித் ஷா:
வெங்கய்ய நாயுடுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். ஒரு விவசாயி மகனாகப் பிறந்த இவரது வெற்றி, அனைத்து விவசாயிகளுக்குமான வெற்றி. இவரின் அறிவுக்கூர்மை மற்றும் அனுபவம், குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திற்கு மிகப்பெரிய சொத்தாகும் என்று தனது வாழ்த்தில் கூறினார்.
ஹமீத் அன்சாரி:
குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு பொருப்பேற்க உள்ள பதவியில் அவர் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
கோபால கிருஷ்ண காந்தி:
வெங்கய்ய நாயுடு வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அனைவருக்கு நன்றி. இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்ததை விட அதிகம் நிறைவடைந்துள்ளேன்.
பிரணாப் முகர்ஜி:
வெங்கய்ய நாயுடுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுளின் ஆசீர்வாதமும், நற்பேறும் அவருக்கு கிடைக்கட்டும் என்று கூறினார்.
சோனியா காந்தி:
நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மூத்த தலைவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் ஏற்கப்போகும் பதவி மிக முக்கியமான மற்றும் சவால்கள் நிறைந்தது என்று தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங்:
அவரின் வருங்கால முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மேலும், வெங்கையா நாயுடுவுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெங்கய்ய நாயுடுவை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.