'கிளாஸ்' பிருத்வி ஷா; அதிரடி காட்டிய இஷான் கிஷன்: இலங்கைக்கு பாடம் எடுத்த இந்தியா

'கிளாஸ்' பிருத்வி ஷா; அதிரடி காட்டிய இஷான் கிஷன்: இலங்கைக்கு பாடம் எடுத்த இந்தியா
'கிளாஸ்' பிருத்வி ஷா; அதிரடி காட்டிய இஷான் கிஷன்: இலங்கைக்கு பாடம் எடுத்த இந்தியா

கிங் கோலி இங்கிலாந்துக்கு சென்று இருப்பதால் புது முகங்களை மட்டுமே நம்பி அதற்கு அனுபவம் வாய்ந்த ஷிகர் தவானை கேப்டனாக்கி ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை இலங்கைக்கு அனுப்பி வைத்தது இந்தியா. அந்த அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் "முன்னாள் சுவர்" ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக்கி அழகு பார்த்தது பிசிசிஐ.

இலங்கைக்கு இந்த புது அணியை அனுப்பியதற்கு, அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் இரண்டாம் தர அணி என இந்தியாவை விமர்சித்தார். ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், நாங்கள் இரண்டாம் தர அணியல்ல என இந்திய வீரர்கள் பதிலளித்துள்ளனர்.

முதல் ஒருநாள் போட்டி, ஒரு 'ரீகேப்'

கொழும்புவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினாலும், மூன்று பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு மேலாகவும், சமிகா கருணரத்னே 43 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் தீபக் சாஹர், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குர்ணல் பாண்ட்யா எக்கானமியாக பந்து வீசினார். இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

தவான் மற்றும் பிருத்வி ஷா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் 58 ரன்களுக்கு முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிருத்வி ஷா 43 ரன்களில் வெளியேற இஷான் கிஷன் களத்திற்கு வந்தார். கேப்டன் தவானுடன் 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே 72 ரன்களுக்கு தவானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்கள் விளாசியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இலங்கை செய்ய தவறியது என்ன ?

இலங்கை தொடக்க வீரர்கள் அவிஷ்கா பெர்ணான்டோ மற்றும் மினோத் பனுகா ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தாலும், அவர்களால் அதிரடியாக ரன்களை சேர்க்கவில்லை. அவிஷ்கா அதிரடியாக ரன்களை சேர்த்த தருணத்தில் தன்னுடைய விக்கெட்டை இழந்தது பெரும் பின்னடைவாக இருந்தது.

அறிமுக வீரரான பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடினார். 2 சிக்ஸர்கள் 2 பவுண்டர்கள் என 22 பந்துகளில் 24 ரன்களை சேர்த்தார். ஆனால் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக இருந்தது. அதேபோல அசலான்கா மற்றும் ஷனகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினாலும் நிலைத்து நீடித்து விளையாட முடியவில்லை. சிறப்பான பேட்டிங் களத்தில் அவர்களால் 262 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கை பேட்ஸ்மேன்களால் அதிரடியாக விளையாடுவதா அல்லது நிலைத்து நின்று விளையாடுவதா என்ற குழப்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். இந்த குழப்பத்தை இந்திய பவுலர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள். அதுவும் குல்தீப் யாதவும், குருணால் பாண்ட்யாவும் துல்லியமாக பந்துவீசினர்.

ஒரு பக்கம் விக்கெட் விழுந்ததும் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என இலங்கை வீரர்கள் திணறினர். இதுவே இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அதுவும் இலங்கையின் கருணாரத்னே இறுதியில் புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர்கள் பறக்கவிட்டதால் 50 ஓவர் முடிவில் இலங்கை கவுரவமான ஸ்கோரை எட்டியது.

பயமில்லா இந்தியா பேட்ஸ்மேன்கள்

அனுபவம் வாய்ந்த ஷிகர் தவானுடன் களமிறங்கிய இளம் வீரர் பிருத்வி ஷா துளி கூட பயமில்லாமல் இலங்கை பந்துவீச்சை எதிர்கொண்டார். பிருத்வி ஷாவின் ஒவ்வொரு பவுண்டரியும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 24 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது அபார திறனை பாராட்டும் விதமாக பிருத்வி ஷாவுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

பிருத்வி ஷா ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த இஷான் கிஷன் அதிரடியை தொடர்ந்தார். தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் பந்தை சிக்ஸருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் இஷான் கிஷன். ஒருப் பக்கம் பொறுப்புடன் விளையாடிய ஷிகர் தவான், மறு முனையில் பேட்ஸ்மேன்கள் அதிரடியை காட்டினார்.

முக்கியமாக பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தங்களுடைய ஒரிஜினல் அதிரடியை கடைப்பிடித்ததுதான் இந்தியாவிள் பலமாக அமைந்தது. அதனால்தான் 263 ரன்களை 36 ஓவரில் எட்டியது இந்திய அணி.

இதேபோன்ற பாணியை கடைப்பிடித்தால் இந்திய அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் மிக எளிதாகவே வெற்றிப் பெற்றுவிடும். ஆனால் இலங்கை நிறைய மாற்றங்களை அணியில் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை மனதளவில் செய்ய வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு வெற்றி வசமாகும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com