நெல்லை: 26 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வாழ்த்துடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்

நெல்லை: 26 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வாழ்த்துடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்
நெல்லை: 26 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வாழ்த்துடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்

நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் செய்யது இமாம் என்பவர், நோய்நொடி ஏதுமின்றி இன்று தனது நூறாவது பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளார். இவரின் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் இவரின் குடும்பத்தினர்.

நெல்லை மாநகர பகுதியான டவுனில் இருக்கிறது நயினார்குளம் என்ற பகுதி. பார்ப்பதற்கு கடல்போல் அலை அடித்துக்கொண்டு அழகாய் காட்சி அளிக்கும் இந்த குளத்துக்கு எதிரே வரிசையாய் வணிக நிறுவனங்கள் இருக்கிறது. அதில் உள்ளே சென்றால், வணிக கடைகளுக்கு மத்தியில் சில வீடுகள் இருக்கின்றன. அங்கு ஒரு சிறு வீட்டில்தான் செய்யது இமாம் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். இமாமின் மனைவி பீமாஜானுக்கு 88 வயது ஆகிறது.

இமாம் மத்திய அரசின் தபால் துறையில் பணியாற்றி 1981ம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். 40 வருடங்களாக பென்ஷன் வாங்கி வரும் மத்திய அரசு ஊழியரான இவர், இன்று தனது நூறாவது பிறந்த நாளை மிகச்சிறப்பாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய பேரிடரான கொரோனா பெருந்தொற்று, அனைத்து வயதினரையும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சுறுத்திவருகிறது. அதேபோல மாறிவிட்ட வாழ்க்கைமுறையால் சர்க்கரை நோய் – ரத்த அழுத்தம் போன்றவை வாழ்வியல் நோய்களாக மாறிவருகின்றன. இந்த மாறிவரும் வாழ்க்கைமுறையில்கூட, மாத்திரை மருந்து எதுவும் இப்போது வரை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார் இமாம் தாத்தா.

இதுபற்றி அவர் பேசுகையில், “சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் எதுவும் எனக்கு வந்ததில்லை. காலை 2 இட்லி; மதியம் எப்போதும் போல் உணவு; இரவு இட்லி, தோசை – இதுமட்டுமே என் உணவுப்பட்டியல். ஒரு நாளில் நான் அதிகம் கேட்பது டீ மட்டும்தான். இரவு 10 மணிக்கு படுக்க போகும்போதும்கூட டீ குடிப்பேன். நள்ளிரவில் எழுந்தாலும் டீ மட்டும் கேட்பேன்” என்கிறார் இமாம். “அவர் எப்போது எந்த நேரத்தில் கேட்டாலும் டீ போட்டுக் கொடுப்பேன்” என புன்னைக்கிறார் இமாமின் துணைவியார் பீமாஜான்.

இமாம் பேசுகையில், “நான் பிறந்ததே நெல்லை டவுணில்தான். தபால் துறையில் பணிக்குச் சேர்ந்தது சீவலப்பேரி பகுதியில். தினந்தோறும் பல கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று என் பணியை செய்வேன்” என்றார்.

இமாமுக்கு நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த ஏழு பேரும் இப்போது ஒவ்வொரு பகுதியில் வசிக்கின்றனர். அனைவருமே அறுபது, எழுபது வயது தாண்டியவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எழுவருக்கும் பிறந்தவர்களின் எண்ணிக்கை 17. அதாவது இமாம் – பீமாஜான் தம்பதிக்கு, 17 பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்த 17 பேருக்கும்கூட, தற்போது அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அந்தவகையில் மொத்தமாக 26 கொள்ளு பேர குழந்தைகள் செய்யது இமாம், பீமா ஜான் தம்பதிகளுக்கு உள்ளன.

இன்று இமாமின் வீட்டில் எளிமையாக அவருக்கு நடந்த நூறாம் பிறந்த நாள் விழாவில், அவரின் பேரன் பேத்திகள் – கொள்ளுப்பேரன் பேத்திகள் என அனைவரும் உடனிருக்க ‘நூறாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என எழுதப்பட்ட கேக்கை முகமெல்லாம் பூரித்து வெட்டினார் இமாம். வந்த உறவுகள் அனைவரும் கேக்கை ஊட்டி செய்யது அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு சென்றனர்.

சிக்கனமான வாழ்க்கை, உணவில் கட்டுப்பாடு, நிறைவான மனம் என இருந்தால் நூறு ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது மட்டுமன்றி, மகன் - மகள் தொடங்கி கொள்ளு பேரன் பேத்திகளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்பதற்கு செய்யது இமாம் தாத்தா ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

- நெல்லை  நாகராஜன் | நாராயணமூர்த்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com