Published : 13,Jul 2021 09:11 PM

பழனி: கேரள பெண்ணின் உடலில் வன்கொடுமைக்கான பாதிப்பே இல்லை- அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்

ஆன்மிகத்தலமான பழனியில் கேரள பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சம்பவத்தில் அந்த பெண்மணி, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதற்கான எந்த பாதிப்புகளும், ஆதாரங்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு ஆன்மிகச்சுற்றுலா வந்து விடுதியில் தங்கியிருந்தபோது 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த பெண் புகார் கூறியிருந்தார். புகாரை வாங்காமல் தனது கணவரை அலைக்கழித்ததாகவும் அதனால் கேரளா திரும்பிவிட்டதாகவும் அப்பெண் கூறியிருந்தார்.

image

இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து ஜூலை 7 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தபோது தான் கூட்டுப்பாலியல் வன்கொடுமை பற்றி வெளியே தெரிந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பெண்ணின் கணவர் என்று சொல்லப்பட்டவர் தெரிவித்த புகாரின் பேரில், கேரள டிஜிபி, தமிழ்நாடு காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் இந்த விவகாரம் பெரிதானது.

இந்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் எழுகிறது அவை,

இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுவது கடந்த ஜூன் 20ஆம் தேதி. ஆனால், ஜூன் 25 ஆம் தேதி வரை தர்மராஜ் என்ற நபரும், அந்த பெண்மணியும் பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவந்துள்ளதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. கூட்டுப்பாலியல் கொடுமை நடந்தபிறகும் 6 நாட்கள் வரை அங்கேயே சுற்றித்திரிந்தது ஏன்?

ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜூலை 5 ஆம் தேதி முதல்தான் தமிழ்நாட்டு கோயில்களில் பக்தர்கள் வர அனுமதி அளிக்கப்பட்டது. அப்படியெனில் ஆன்மிக சுற்றுலா என்ற காரணமும் பொய் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் விடுதி அப்போது திறக்கப்படாத நிலையில், ஊழியரிடம் கேட்டு அந்த ஜோடி தங்கியிருந்துள்ளனர். மதுபோதையில் இருவரும் சண்டையிட்டதால் அவர்களை வெளியேற்றிவிட்டதாகவும், அதன் பிறகு கேரள காவல் துறையைச் சேர்ந்தவர் என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் விடுதி உரிமையாளர் முத்து தெரிவித்துள்ளார்.

image

இருவரும் கணவன் மனைவி என முதல் தகவல் அறிக்கையில் தர்மராஜ் கூறியதும் பொய் என தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக அந்த பெண் எந்த பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகவில்லை என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா சென்றுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின் கீழ் கேரள காவல் துறையினர் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இந்த ஜோடியிடம் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்