ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு - 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை எனத் தகவல்

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு - 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை எனத் தகவல்
ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு - 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை எனத் தகவல்

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேர்வைத் தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதன்பிறகு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கடந்த வாரத்தில் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் ஹரீஷ் ராவத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிரியங்கா காந்தி லக்னோ செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலும் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்துள்ளார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்தித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடிக்கு ஆலோசகராக செயல்பட்டார். சமீபத்தில் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக செயல்பட்டார். இவர் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலருக்கும் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு முக்கிய தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார்.

ஆகவே பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமான பிரசாந்த் கிஷோர் விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com