[X] Close

சென்னை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை விவகாரம்; காவலர் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு

Chennai-Auto-driver-suicide-case-Police-suspend

ஆட்டோ ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டிய காவலர் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Advertisement

சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்யராஜ், தனது நண்பர் பிரதீபுடன் வெளியே சென்றிருந்தார். கிரீன் கார்டன் அருகே சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு, பாக்யராஜ் இயற்கை உபாதைக்காக காலி மைதானத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த திருமுல்லைவாயில் காவல் நிலைய காவலர் சந்தோஷ், ஆட்டோவில் தனியாக இருந்த பிரதீப்பை அழைத்து விசாரித்துள்ளார். அதே நேரம் பாக்யராஜூம் அங்கு வரவே, இருவரையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளார்.

மேலும், பாக்யராஜிடம் இருந்த ஐஃபோனையும் காவலர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ், ஐஃபோனை திருப்பி தரும்படி காவலரிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, கீழே கிடந்த காலி மதுபாட்டிலை உடைத்து தற்கொலை செய்து கொள்வதாக பாக்யராஜ் மிரட்டியுள்ளார்.


Advertisement

அப்போது, முடிந்தால் தற்கொலை செய்து கொள் என காவலர் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாக்யராஜ், உடைந்த மதுபாட்டிலை தனது கழுத்தில் குத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்டு பதற்றமடைந்த காவலர் சந்தோஷ், ஐஃபோனை அங்கேயே வீசிவிட்டு புறப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த பாக்யராஜை, அவரது நண்பர் பிரதீப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் தற்கொலைக்கு காவலர் சந்தோஷ்தான் காரணம் என குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஆனந்த், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், காவலர் சந்தோஷிடம், அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close