Published : 12,Jul 2021 10:43 PM
சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 26 வயதான அவருக்கு 9 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் பாலச்சந்திரன் பார்த்திபன் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் தொண்டை வறட்சி மற்றும் காய்ச்சல் காரணமாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது பரிசோதனை முடிவு வருவதற்குள் மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அவரது இருப்பிடம் குறித்து தேடிய போலீசார் அவரை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். அவர் இந்தியா செல்வதற்கான டிக்கெட்டுடன் விமான நிலையத்தில் இருந்துள்ளார். தொடர்ந்து அவரது விதி மீறல்களுக்காக இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.