[X] Close

மிரண்டுபோன ஆங்கிலேயர்: 215ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி - வலிமிகு வரலாற்றுப் பின்னணி!

சிறப்புக் களம்

215-years-of-Vellore-Mutiny-Revolution--Rememberance

‘புரட்சிக்கு தலைமை தேவையில்லை; உணர்வும் தன்னெழுச்சியும் போதும்’ என்பதை மக்களுக்கு உணர்த்திய பெருமை, ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம் காணவைத்த வேலூர் சிப்பாய் புரட்சிக்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டங்கள் நாடெங்கும் தொடங்க, முதல் தீப்பொறியாய் வேலூரில் உருவானது இந்த சிப்பாய் புரட்சி. இது தொடங்கி இன்றுடன் (ஜீலை 10, 2021) தனது 215-வது ஆண்டை வீரத்துடன் கடக்கிறது.


Advertisement

image

சுதந்திரக்கு முன்பு, மைசூர்  பேரரசரான திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நான்கு முறை போர்கள் நடைபெற்றன. 1799-ல் நடைபெற்ற கடைசி மைசூர் போரின் போது திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்புசுல்தான், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பதால் அவரது குடும்பத்திலிருந்து மீண்டும் யாரேனும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாகலாம் என கணித்தனர் ஆங்கிலேயர்கள். அதனால் திப்புசுல்தானை கொன்றவுடன், ஶ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்த திப்பு சுல்தானின் குடும்ப உறுப்பினர்கள் 1378 பேரை சிறை பிடித்து வேலூர் கோட்டையில் அடைத்து வைத்தனர். திப்புசுல்தான் குடும்பத்தில் இருந்த ஆண்கள், கோட்டையினுள் உள்ள பாதுஷா மஹாலிலும்; பெண்கள், பேகம் மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.


Advertisement

image

இந்த சூழலில்தான் வேலூர் கோட்டையில் பணியாற்றி வந்த இந்து, முஸ்லீம் சிப்பாய்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் தங்களது அடக்குமுறையை காட்டி வந்தனர். மேலும் ஆங்கிலேய - இந்திய சிப்பாய்களுக்கு இடையேயான ஊதிய வேறுபாடு, பசுந்தோலால் ஆன காலணிகளை சிப்பாய்கள் அணிய வேண்டும், பன்றி கொழுப்புக்களை கொண்டு துப்பாக்கிகளை சிப்பாய்கள் துடைக்க வேண்டும் போன்ற ஆங்கிலேயரின் உத்தரவுகள் இந்திய சிப்பாய்களிடம் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

image


Advertisement

இந்நிலையில், 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி திப்பு சுல்தானின் ஆறாவது மகளான நூருன் நிஷா பேகத்திற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை  சாதகமாக்கிக்கொள்ள முடிவு செய்த இந்திய சிப்பாய்கள் ஆயிரம் பேர், நூருன் நிஷாவின் திருமண நிகழ்வில் பங்கேற்க்கும் பெண்களை போல வேடம் அணிந்து கோட்டையினுள் நுழைந்தனர். 

 image

திருமண விழாவின்போது, திடீரென ஆங்கிலேயே அதிகாரிகளை சிப்பாய்களையும் சுடத்தொடங்கினர். எவ்வித தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக புரட்சியில் குதித்தார்கள் அந்த சிப்பாய்கள். இதனை சற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த புரட்சியின் போது வேலூர் ஆங்கிலேய படையின் படை தளபதியான ஜான் ஃபேன்கோர்ட்(John Fancourt) கொல்லப்பட்டார்.

தொடர்ந்து இரவு முழுவதும் இந்திய சிப்பாய்களின் புரட்சியின் நடந்தது. இதன் காரணமாக, மறுநாள் காலை வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஜாக் கொடி இறக்கப்பட்டது. அதற்கு பதிலாக, திப்பு சுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர்.

image

அன்றைய தினம் வேலூர் கோட்டையில் நடந்த தாக்குதல் தகவலை அறிந்த ஆற்காட்டில் இருந்த, ஆங்கிலேய படை தளபதி ரோல்லோ கில்லஸ்பி (Rollo Gillespie) தனது படைகளுடன் விரைந்து வந்து வேலூர் கோட்டையின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து இந்திய சிப்பாய்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அதன்பின் சுமார் 8 மணி நேரம் புரட்சி நீடித்தது.

image

இதில் சுமார் 800 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், 600 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 15 ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட 135 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.  இறந்த சிப்பாய்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காலையில் ஏற்றப்பட்ட புலிக்கொடியை கீழே இறக்கி மீண்டும் ஆங்கிலேய ஜாக் கொடியை ஏற்றி புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

image

சிப்பாய் புரட்சியின் போது கொல்லப்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகள், கோட்டை எதிரில் உள்ள CSI கிருஸ்தவ தேவாலயத்தின் மைதானத்தில் புதைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கல்லரைகளும் கட்டப்பட்டது. கொல்லப்பட்ட இந்திய சிப்பாய்களோ, கோட்டைக்கு உள்ளே உள்ள கிணற்றில் சடலங்களாக வீசப்பட்டு ஒட்டுமொத்தமாக தீவைத்து மொத்தமாக எரிக்கப்பட்டனர். தங்கள் வன்மத்தை, சிப்பாய்கள் மீது ஆங்கிலேயர்கள் இப்படியாக காட்டி தீர்த்துக்கொண்டனர்.

image

இந்த சிப்பாய் புரட்சியின் நினைவாக, கடந்த 1998-ம் ஆண்டு வேலூர் மக்கான் சிக்னலில் அன்றைய முதல்வர் கருணாநிதி நினைவுத்தூண் ஒன்றை எழுப்பினார்‌. இந்நினைவு தூண் ஒன்றே நம் சிப்பாய்களின் தியாகத்தையும் வீரத்தையும் பறைசாற்றிக்கொண்டு இன்று கம்பீரமாக நிற்கிறது.

image

இந்த போற்றுதலுக்குரிய சிப்பாய் புரட்சி, இன்றுடன் தனது 215 வது ஆண்டை கடக்கிறது. இந்நாளில் நம் சிப்பாய்களை நினைவுகூர்வதற்காக, நினைவு தூணில் வீரவணக்கம் செலுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்றன.

- ச.குமரவேல்


Advertisement

Advertisement
[X] Close