[X] Close

தமிழ்நாடு பட்ஜெட்டில் சமர்பிக்கப்படும் வெள்ளை அறிக்கையில் என்னவெல்லாம் இருக்கும்?

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

White-statement-on-Tamil-Nadu-Budget-What-will-be-in-it

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் அந்த அறிக்கையில் எது போன்ற அம்சங்கள் இடம் பெறும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.


Advertisement

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பிக்க உள்ள வெள்ளை அறிக்கையில் 2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற போது இருந்த நிதி நிலையிலிருந்து தற்போதுள்ள சூழல் வரை முழுமையான விவரங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு திமுக அரசு பதவியிலிருந்து வெளியேறும் போது மாநிலத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் அடுத்து அதிமுக அரசு பொறுப்பேற்று பத்தே ஆண்டுகளில் இக்கடன் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டதாகவும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “பணமதிப்பு நீக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த ஜிஎஸ்டி ஆகியவற்றால் மாநில அரசின் நிதி நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக அரசின் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பை தருவதற்காக மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற வரையறையை அரசு கடந்து விட்டது” என்றார்.


Advertisement

அரசின் நிதிநிலை தவிர மின் வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட அரசு நடத்தும் நிறுவனங்களின் நிதி நிலை விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற உள்ளது. மோசமாக உள்ள நிதிச் சூழலை சரி செய்வது எப்படி என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற உள்ளது.

சட்டப்பேரவையில் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தரப்படுவது இது முதல் முறையல்ல. 2011ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பொன்னையனும் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் நிதி நிலை மோசமாக இருப்பதாக பொன்னையன் விமர்சித்திருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close