[X] Close

பிறரைக் கட்டுப்படுத்தும் ஆளுமை குணம் கொண்டவரா நீங்கள்? - ஓர் உளவியல் அலர்ட்

சிறப்புக் களம்,ஹெல்த்

Are-you-having-controlling-behavior--How-to-know-it-

கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தைகள், காதல், நட்பு என எந்த உறவாக இருந்தாலும் அதில் நம்பிக்கையும், சுதந்திரமும் சமநிலையாக இல்லாவிட்டால் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். பெரும்பாலான உறவுகளில் பிரச்னை வரக் காரணம், பிறரைக் கட்டுபடுத்தும் ஆளுமை குணம். இந்த குணம் தனக்குள் இருப்பதால்தான் பிரச்னைகள் வருகிறது என்பதே பலருக்கும் தெரியாது. கட்டுப்படுத்தும் ஆளுமை குணங்களுக்கான சில அறிகுறிகளை தெரிந்துகொண்டு அதை மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியான உறவுகளை அமைக்கலாம்.


Advertisement

விமர்சனங்கள்: பிறருக்கு தெரிவிக்கும் பாராட்டுகள்கூட விமர்சனங்களாக இருத்தல். அதாவது, உடன் இருப்பவர் நன்றாக உடை அணிந்திருந்தாலோ அல்லது ஏதேனும் சிறப்பாக செய்திருந்தாலோ அதற்கான பாராட்டுகளைக்கூட விமர்சன வார்த்தைகளாகவே வெளிப்படுத்துதல். உடன் இருப்பவர்களை விமர்சித்துக்கொண்டே இருத்தல் அவர்களுக்கு ஒருவித எரிச்சலையும், மன காயத்தையும் ஏற்படுத்தும்.

நட்பு வட்டாரங்களில் தலையிடுதல்: சிலருக்கு தனது நட்பின் அல்லது துணையின் நண்பரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என யோசிப்பது. சிலர் அதை ஒரு நோக்கமாகவே எடுத்துக்கொண்டு இருவருக்குமிடையே பிரிவை உண்டுபண்ண உடன் இருப்பவரிடம் அவர்களைப் பற்றி தவறாக சொல்லுதல் மற்றும் அவர்களை காணும்போது தவறான பிம்பத்தை உருவாக்குதல் போன்ற சில வேலைகளில் ஈடுபடுவார்கள்.


Advertisement

image

உடைகளைத் தேர்ந்தெடுத்தல்: நட்பின் அல்லது துணையின் சிறுசிறு விஷயங்களில் கூட தலையிடுதல். அதாவது வெளியே செல்லும்போது என்ன உடை அணியவேண்டும், எப்படி அணியவேண்டும் என்பதைக்கூட முடிவெடுத்தல். எப்போதும் உடைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய சௌகர்யம் மற்றும் மனநிலைக்கு ஏற்றவாறு இருந்தால்தான் வெளியே செல்லும்போதும், செய்யும் வேலையிலும் கவனம் செலுத்தமுடியும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

செல்போனை ஆராய்தல்: பிறருடைய செல்போனை ஆராய்வதில் சிலருக்கு அதிக ஆர்வம் இருக்கும். குறிப்பாக தனது துணை அல்லது நட்பின் செல்போன். இதுவும் ஒருவகை கட்டுப்படுத்தும் ஆளுமை குணம்தான். இருவருக்கிடையேயான உறவு எவ்வளவு பலமானதாக இருந்தாலும், நீண்ட நாட்கள் உறவில் இருந்தாலும்கூட அவருடைய தனிப்பட்ட உரிமைகளில் தலையிட்டு ஆராய்வது தன்மீதான மதிப்பை தானே தன் துணையிடம் குறைத்துக்கொள்ள வழிவகுக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.


Advertisement

எப்போதும் உடனிருத்தல்: தனக்கு பிடித்தவர் எப்போதும் தன்னுடனே இருக்கவேண்டும் என நினைத்தல். அதாவது மனதளவில் மட்டுமல்ல; தன் கூடவே தன் எதிரிலேயே இருக்கவேண்டும் என நினைத்தல். அவர்கள் தனியாக இருப்பதற்கு இடம் கொடுக்காவிட்டால் உங்கள் துணை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகநேரிடும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.

image

உங்கள் முடிவுக்கு இசையவேண்டும்: நீங்கள் எடுக்கும் முடிவுக்கு துணை அல்லது நட்பு இசைந்து போகவேண்டும் என்ற மனப்பாங்கு. அதாவது நீங்கள் 3 மணிக்கு மதிய உணவை சாப்பிடலாம் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு யாரும் மறுப்பு தெரிவித்துவிடக்கூடாது. எப்போதும், எல்லாவற்றையும் குறித்து நான் மட்டும்தான் முடிவெடுக்கவேண்டும் என்ற எண்ணம் எந்த உறவிலும் கைகொடுக்காது.

சமரசம் என்ற வார்த்தைக்கு இடமில்லை: உங்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றிவிட்டால் யாரைப் பற்றியும் யோசிக்காமல், குறிப்பாக உங்கள் நட்பு அல்லது துணையைப் பற்றி யோசிக்காமல் அதை செயல்படுத்துதல். மேலும் உறவுகளில் சமரசம் என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் இருப்பது எதிரிலுள்ளவரை மனரீதியாக எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்திக்கவேண்டும்.

கோபத்தை பிரயோகித்தல்: நீங்கள் நினைத்தது நடக்கவேண்டும் என்றால் கோபத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவது. அதாவது, உங்கள் துணையை உங்களுடைய வழிக்குக் கொண்டுவர அவருடைய செயல்களில் குற்றம் கண்டுபிடித்து அதன்மீது கோபப்படுதல். இது அவர்களுக்கு ஒருவித குற்ற உணர்வை வரவைத்து உங்கள் முடிவுக்கு இசைய நீங்கள் பயன்படுத்தும் ஒரு தந்திர யுக்திதான்.

இந்தக் கட்டுப்படுத்தும் ஆளுமை மனப்பாங்கு நீண்ட நாட்கள் உறவை கொண்டுசெல்லப் போவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


Advertisement

Advertisement
[X] Close