Published : 28,Jan 2017 12:48 PM
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க சட்டம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் நடவடிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வு மாணவர்கள் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்தில் இருப்பதாகவும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்தில் இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பேரவை கூட்ட தொடரிலேயே நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு விலக்களிக்கும் வகையில் சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு கொண்டு வரும் சட்ட முன்வடிவை நிறைவேற்றுவதற்கு தி.மு.க முழு ஆதரவு அளித்து, துணை நிற்கும் என்றும், ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக வளரவும், சமூகநீதி பாதுகாக்கப்படவும் இந்த வருடமே நீட் தேர்வு எழுதுவதற்கு விலக்களிக்கும் வகையில், தேவைப்பட்டால் கூட்டத்தொடரை நீட்டித்து கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.