விடுதலையான மீனவர்களை பசியோடு பல மணிநேரம் காக்க வைத்த கடலோரக் காவல்படை

விடுதலையான மீனவர்களை பசியோடு பல மணிநேரம் காக்க வைத்த கடலோரக் காவல்படை
விடுதலையான மீனவர்களை பசியோடு பல மணிநேரம் காக்க வைத்த கடலோரக் காவல்படை

இலங்கை கடற்படை விடுவித்தது முதல், காரைக்கால் துறைமுகத்தில் நள்ளிரவில் கப்பலை விட்டு இறங்கும்வரை பட்டினியோடு காத்திருந்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 28 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர், காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்கள், நாகையைச் சேர்ந்த 19 மீனவர்கள் என மொத்தம் 77 பேரை அழைத்து வந்த இந்திய கடலோர காவல்படை, இரவு 10 மணிக்கு காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தது. ஆனால் மீனவர்களை படகுகளைவிட்டு இறக்காமல், நள்ளிரவு வரை கப்பலிலேயே அமர வைத்திருந்தனர். உணவு இன்றி, படகில் மீனவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால், மீனவர்களின் உறவினர்கள், கடலோர காவல்படையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்களை அவசர அவசரமாக விடுவித்தனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலையான மீனவர்கள் இரவு 10 மணிக்கு காரைக்கால் தனியார் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கப்பலில் ஏறுவதற்கு அனுமதி அளித்த இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளை அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்கள் கடற்படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரே கப்பலில் 77 மீனவர்களை ஏற்றி வந்ததால் மீனவர்கள் நிற்கக் கூட இடமில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களை விரைவில் வீட்டிற்கு அனுப்பாமல் நள்ளிரவு வரை காக்கவைத்து அவர்களுக்கு உணவு கூட வழங்காமல் அலட்சியபடுத்தியதாக உறவினர்கள் வேதனை அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்களின் உறவினர்கள் கடற்படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உறவினர்கள் கடுமையாக கூச்சல் போட ஆரம்பித்தனர். அதனால் மீனவர்களை அவசரமாக வெளியேற்றினர். இலங்கை கடற்படையால் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உணவு அளிக்காமல் அழைத்து வந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. கடற்படை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் பேட்டி கொடுத்தனர். இதனை படம் எடுத்த நிருபரை தடுத்து நிறுத்தி கடற்படை அதிகாரிகள் தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மற்ற செய்தியாளர்கள் கடற்படை அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com