Published : 04,Aug 2017 04:13 AM
ஆதார் தகவல்களை திருடிய ஓலா ஊழியர் கைது

சட்டவிரோதமான முறையில் ஆதார் தகவல்களை திருடிய ஓலா கால் டாக்ஸி நிறுவனத்தின் மென்பொருள் வல்லுநரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஓலாவின் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபினவ் ஸ்ரீவத்ஸவ் என்பவர் 5 செயலிகளை உருவாக்கி அதன் மூலம் சட்டவிரோதமாக ஆதார் தகவல்களை திருடியதாக ஆதார் அமைப்பு கடந்த வாரம் பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு அபினவ் ஸ்ரீவத்ஸவ்வை கைது செய்ததாக பெங்களூரு காவல்துறை ஆணையர் சுனில் தெரிவித்துள்ளார்.
இந்த போலியான செயலிகள் மூலம் ஆதார் தகவல்களை திருடியதுடன் அதன் மூலம் விளம்பரங்கள் பெற்று 40 ஆயிரம் ரூபாய் வரை அவர் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீவத்ஸவ் அறிமுகம் செய்த இந்த போலி செயலிகள் இதுவரை 50 ஆயிரம் முறைக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையத்தின் சர்வரை ஹேக் செய்து தனது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிட்டிருந்த ஸ்ரீவத்ஸவ் கோரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.