Published : 04,Aug 2017 04:06 AM
இன்றுடன் முடியும் தினகரனின் காலக்கெடு... அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?

அதிமுக அணிகள் இணைவதற்கு டிடிவி தினரகன் வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளது.
அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கு துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தார். அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை என தினகரன் தரப்பு கூறிவருகிறது.
இந்நிலையில், 4 ஆம் தேதிக்கு பின் கட்சிப் பணியில் தீவிரமாக இறங்கப் போவதாக டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்துக்கு அவர் நாளை செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், அணிகள் இணைப்பு சாத்தியமாகுமா? டிடிவி தினகரன், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவை திரட்டுவாரா? என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
அதேசமயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை கழகத்துக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால், அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.