[X] Close

கொரோனா முத்தம் - புலிட்சர் பரிசு வென்ற புகைப்படத்தின் நெகிழவைக்கும் பின்னணி

உலகம்,சிறப்புக் களம்

COVID-Kiss--The-Story-Behind-a-Pulitzer-Winning-Photo

'ஒரு முத்தத்தால் வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா?' என வியக்க வைக்கும் அந்தப் புகைப்படத்தை பார்த்தால் நெகிழ்ந்து போவீர்கள் என்பது நிச்சயம். அந்தப் படத்தை எடுத்த புகைப்பட கலைஞர்தான் இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசை வென்றிருக்கிறார்.


Advertisement

வலி மிகுந்த காலத்தில் அன்பின் செய்தியை அழுத்தமாக உணர்த்தும் அந்தப் புகைப்படத்தின் நாயகனும், நாயகியும் - ஒரு தாத்தாவும், பாட்டியும் என்பதுதான் விஷயம். ஆம், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 80 வயதை கடந்த அந்த வயதான தம்பதி முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சியைதான் எமிலியோ மெரநேட்டி (Emilio Morenatti) எனும் அந்த புகைப்படக் கலைஞர் படம் எடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு உலகை கொரோனா உலுக்கியபோது மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கொரோனா பாதிப்பை தொடர் புகைப்படங்களாக பதிவு செய்த மொரனேட்டி எடுத்த படங்களில் ஒன்றுதான் வயதான தம்பதியின் முத்தம்.


Advertisement

அந்தப் படத்தை எடுத்தபோது, கேமராவுக்குப் பின் கண்ணீர் சிந்தியதாக அவர் நெகிழ்சியுடன் கூறியிருக்கிறார். அவர் மட்டும் அல்ல, அந்த படம் எடுக்கப்பட்டபோது அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்டோரும் கண்ணீரில் நனைந்திருக்கின்றனர். ஏனெனில் அந்தக் காட்சி உள்ளத்தை உருக வைப்பதாக இருந்தது.

85 வயதான பாஸ்கல் பரேசும், 82 வயதான அகஸ்டினா கனமேராவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருப்பவர்கள். கொரோனா பேரிடர் சோதனையால், அன்பான கணவன், மனைவி இருவரும் பிரிந்திருக்கும் நிலை உண்டானது.

இப்படி 100 நாட்கள் பிரிந்திருந்த பிறகு, இருவரும் பார்த்துக்கொண்டபோது, அந்த வயதான தம்பதியர் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக முககவசம் அணிந்த நிலையில், உடலில் பிளாஸ்டிக் உரை அணிந்தபடி, அந்த தாத்தாவும் பாட்டியும் கொடுத்துக்கொண்ட இந்த நீண்ட முத்தம் அப்படியே காலத்தை உரைப்பதாக கேமராவில் பதிவானது.


Advertisement

image

இந்தப் படம் உள்ளிட்ட கொரோனா காலத்தை பதிவு செய்யும் புகைப்பட வரிசைக்காக மொரனேட்டி புலிட்சர் பரிசு பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட யுத்த பூமிகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ள அனுபவசாலியான மொரனேட்டி, கொரோனா பாதிப்பை ஆவணப்படுத்த தீர்மானித்தபோது, ஏற்கெனவே சமூகத்தால் விலக்கப்பட்டிருந்த வயதானவர்களை தேர்வு செய்ததாக கூறுகிறார். தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், மருத்துவமனைகளில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், செவிலியர் உதவியோடு, வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த வயதானவர்களை சந்தித்து படம் எடுத்ததாக கூறுகிறார்.

சரியான பாதுகாப்பு கவசம் கூட இல்லாத நிலையில், பிளாஸ்டிக் உரையோடு படம் எடுக்கப்போனதை நினைவுகூர்பவர், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும், ஆடைகளை களைந்து குளித்து முடித்துவிட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.

இந்தக் காலத்தில் வீட்டில் தூய்மை பகுதி, மாசு பகுதி என பிரித்துக்கொண்டு, மாசான பகுதியில் தான் இருந்ததாக கூறுகிறார். யுத்த பூமியில் எல்லாம் பணியாற்றி இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமி அச்சுறுத்தும் சூழலில் படம் எடுத்தது இதுவரை இல்லாத அனுபவம் என்றும் கூறுகிறார்.

கடந்த காலங்களில் உயிருக்கு அஞ்சாமல் ரிஸ்க் எடுத்து படம் எடுத்தபோதெல்லாம் தந்தையாக இருப்பது என்றால் என்ன என உணர்ந்ததில்லை என்பவர், முதல் குழந்தையை கையில் ஏந்தியதும், எல்லாம் மாறியது என்கிறார். தன் பிள்ளைகள் தன்னை மேம்பட்ட மனிதராக மாற்றியிருப்பதாகவும் கூறுகிறார். கொரோனா காலத்தில் பிள்ளைகளை நினைத்து பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்ததாகவும் தெரிவிக்கிறார்.

அண்மையில், மொனரேட்டி பரிசு வென்ற அந்தப் புகைப்படத்தில் உள்ள தம்பதியை சந்தித்து, அந்த படத்தின் பிரேம் வடிவத்தை பரிசளித்திருக்கிறார். இந்தப் படம் எடுத்த நெகிழ்ச்சியான அனுபவத்தையும் அந்த தம்பதியுடன் பகிர்ந்திருக்கிறார்.

கணவருக்கு இப்போது கண் பார்வை மங்கிவிட்ட நிலையில், அவரால் சரியாக படத்தை பார்க்க முடியாத நிலையில், அந்தக் காட்சியின் தன்மையை அவர் கணவருக்கு விவரித்ததுதான் இந்த சந்திப்பின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.

தடுப்பூசி மட்டுமல்ல... கோரோனா பேரிடரை வெல்லும் இன்னொரு பேராயுதமும் உண்டு. அதை மனிதர்கள் 'அன்பு' என்று அழைப்பர்.

- சைபர்சிம்மன்

தகவல் உறுதுணை: PetaPixel


Advertisement

Advertisement
[X] Close