
எதிர்பார்த்ததைபோலவே ஜூன் மாதத்தில் கார் விற்பனை மிக அதிக வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு விற்பனையை அடைந்திருக்கின்றன.
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 51,274 கார்கள் விற்பனை செய்திருந்தது; இந்த ஆண்டு ஜூன் மாதம் 1.24 லட்சம் கார்கள் விற்பனை செய்திருக்கிறது. இதேபோல ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், டொயோட்டா, எம்.ஜி மோட்டார். கியா மோட்டார் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களின் கார்களும் நன்றாக விற்பனையாகி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1,16,928 கார்கள் விற்பனையானது. அதேநேரத்தில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 2,55,674 வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த மே (2021) மாதம் 1,03,000 கார்கள் விற்பனையாகி இருந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் ஆட்டோமொபைல் விற்பனை நன்றாக இருந்தாலும், ஜூன் மாதத்தில் மந்தமாக இருந்தது. கடந்த ஆண்டு குறைவாக இருந்ததால் தற்போது அதிக விற்பனையாகி இருப்பதுபோல தெரிகிறது. அதேசமயத்தில் தேவை உயர்ந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் பெரிய வாகன விற்பனை பெரிதாக இல்லை என்பதால், ஜூன் மாதத்தில் தேவை உயர்ந்திருக்கிறது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட வாகனங்களுக்கான தேவை உயரந்திருப்பதால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் தேவை உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.