Published : 01,Jul 2021 07:19 PM

'விக்ரம்' to வெற்றிமாறன் படம்: மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்

-Vikram--to-Vetrimaran-movie--Kamal-Haasan-is-serious-about-acting-again

அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல்ஹாசன், மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி, அடுத்தடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய பிறகு புதிய திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல்ஹாசன். இதனால், ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த காட்சிகளோடு சிலவற்றை மட்டும் சேர்த்து 'விஸ்வரூபம்-2' படத்தை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் 232-வது திரைப்படமாக 'விக்ரம்' திரைப்படத்தை அறிவித்து ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் எனவும் தெரிவித்தனர். ஆனால், சட்டப்பேர்வை தேர்தல் காரணமாக அந்தப் பணிகள் தாமதமானது.

இந்நிலையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து 'விக்ரம்' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட ப்ரீ-புரடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால், ஒரே கட்டமாக 'விக்ரம்' படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 'விக்ரம்' படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்பதால், அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகளை கேட்டு இறுதி செய்து வருகிறார் கமல்ஹாசன்.

அந்தவகையில், ஏற்கனவே 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ஸ்ரீப்ரியா தயாரிக்கும் இந்தப் படத்தை பாபநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமலஹாசன் நடிப்பதும் உறுதியாகியிருக்கிறது. அழுத்தமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன், பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த கமல்ஹாசனோடு இணைவதால் அப்படம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருக்கிறது. இதனால், பெரும்பான்மை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்தப் படமும் விரைவில் தொடங்குவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக படங்கள் வெளியாகாமல் இருந்த ரசிகர்களின் குறையை, அடுத்தடுத்த வெளியீடுகள் மூலம் கமல்ஹாசன் களைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்