[X] Close

செங்கல்பட்டு: காயங்களுடன் மீட்கப்பட்ட 11 வயது சிறுமியின் உடல்! - போலீசார் விசாரணை

குற்றம்

செங்கல்பட்டு அருகே காயங்களுடன் மீட்கபட்ட 11 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவர் வெங்கம்பாக்கத்தில் –திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் திட்சிதா அதே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை கணேசன் வயலுக்கு சென்று விட அவரது மனைவி சாந்தி தனது இரண்டாவது மகள் திட்சிதாவை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள கனிணி மையத்திற்கு மின்சார கட்டணம் செலுத்த சென்றுள்ளார். மின்சார கட்டணம் செலுத்திய பின்னர் திட்சிதாவை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு, இறைச்சிக் கடைக்கு வியாபாரத்திற்கு சென்று விட்டார்.


Advertisement

இந்நிலையில் மகள் வீடு திரும்பவில்லை என அறிந்த பெற்றோர் மகளை அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். மகளை காணாததால் இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி வீடு அருகே உள்ள முட்புதரில் திட்சிதா மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்குவந்த சதுரங்கபட்டினம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலைமறியல் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலைமறியல் கைவிடப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close