[X] Close

எல்லையில் மீண்டும் படைகளைக் குவிக்கும் சீனா: இந்தியாவின் எதிர்வினை என்ன? - ஒரு பார்வை

இந்தியா,சிறப்புக் களம்

China-concentrating-troops-back-on-the-border

பல்வேறு அமைதி ஒப்பந்தங்களை மீறி, லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா மீண்டும் ராணுவத்தை குவித்து வருவதால், இந்தியாவின் கிழக்கு எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. லடாக் மட்டும் அல்லாது இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் சமீப வாரங்களில் அதிக எண்ணிக்கையில் வீரர்களை குவித்துள்ளது. 

சென்ற வருடமும், இந்த வருடமும் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் பதற்றத்தை குறைப்பதாக ஒப்புக் கொண்டிருந்த சீனா தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் இந்திய எல்லையில் படைகளை குவிக்கத் தொடங்கியுள்ளது.

திபெத் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சீன படைகளில் ஒரு பகுதி தற்போது லடாக் மற்றும் அதை ஒட்டியுள்ள பிற எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இந்திய அரசுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதைத் தவிர இந்தியாவை ஒட்டி உள்ள எல்லைப் பகுதிகளில் புதிய விமான ஓடு தளங்கள் அமைப்பது மற்றும் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது என சீனா தனது உட்கட்டமைப்பு வசதிகளை ஒப்பந்தங்களுக்கு மாறாக வலுப்படுத்தி வருகிறது. 


Advertisement

இதுகுறித்த தகவல்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். 


Advertisement

ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களில் வடபகுதியிலுள்ள இந்திய ராணுவ முகாம்களை பார்வையிட்டு டெல்லி திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் முதல் நடைபெற்ற பல்வேறு எல்லை பேச்சுவார்த்தைகளில் சீனா ராணுவம் தனது வீரர்களை எல்லைப் பகுதியில் இருந்து திருப்பி அனுப்ப ஒப்புக்கொண்டு இருந்தது. பதிலுக்கு இந்திய ராணுவமும் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களை விட்டு விலகி செல்ல வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் தனது வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து மீண்டும் பதட்டமான சூழ்நிலையை சீன ராணுவம் உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகள் மூலமும் இந்தியாவை அச்சுறுத்த சீனா முயற்சி செய்து வருகிறது என அதிகாரிகள் கருதுகிறார்கள். சமீபத்தில் ஜம்மு ராணுவ தளத்தில் ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்ற அதன் பின்னணியில் சீனாவின் சதி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 

இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து, இந்தியாவுக்கு நெருக்கடியாக செயல்படும்படி இந்த அண்டை நாடுகளை சீனா தூண்டிவிடுகிறது என இந்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது.

இந்த அம்சம் குறித்தும் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அலசப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்தியாவின் கிழக்கு எல்லை மற்றும் வடமேற்கு இல்லை ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஒரேநேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. லடாக் எல்லையில் இந்தியா முன்னெச்சரிக்கையாக கிட்டத்தட்ட 50,000 கூடுதல் ராணுவ வீரர்களை ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. 

இதைத் தவிர இந்தப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி உள்ள அரசு, அடுத்த கட்டமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகளை கொள்முதல் செய்ய ஆயத்தமாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நவீன போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். 

விரைவிலேயே எல்லைச் சூழல் குறித்து பல்வேறு உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெறும் என்றும் புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடைபெறலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சென்ற வருடம் கால்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை ஒப்பந்தங்களை மீறி சீன ராணுவ வீரர்கள் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டது. அதேபோன்ற சூழ்நிலை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள அதற்கான காரணம் சீனாவின் ஆக்கிரமிப்பு கொள்கைகளே என்றும், இதை தடுத்து நிறுத்த இந்தியா பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

- கணபதி சுப்பிரமணியம்

Related Tags : China India இந்தியாசீனா

Advertisement

Advertisement
[X] Close