Published : 27,Jun 2021 09:46 PM
வாணியம்பாடி: பிச்சை எடுப்பதுபோல வீடுகளில் நுழைந்து நூதன திருட்டு – ஒருவர் கைது

வாணியம்பாடியில் பிச்சை எடுப்பது போல் நாடகமாடி வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக ஒரு நபர் பிச்சை எடுப்பது போல் நடித்து, வீட்டிற்குள் திடீரென நுழைந்து யாரும் இல்லை என்றால் பொருட்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக வாணியம்பாடி காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது.
இந்நிலையில் 05.06.2021 கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் லேப்டாப், செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் 18.06.2021 அன்று வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் சத்யா என்பர் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டுகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 1 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து பிச்சை கேட்பது போல் நடித்து வாணியம்பாடி முழுவதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார்.
இன்று மாராபட்டு அருகே தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிய நபரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வேலன் என்பது தெரியவந்தது. அவர், வாணியம்பாடி முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பிச்சைக்காரனைபோல் நடித்து வீடுகளில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ஏடிஎம் கார்டுகள், நகைகள் மற்றும் பொருட்களை மீட்ட வாணியம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்