[X] Close

அன்று முதலீடு ரூ.2 லட்சம், இன்று மதிப்பு ரூ.7600 கோடி - 'தைரோகேர்' வேலுமணி ஜெயித்த கதை!

வணிகம்,சிறப்புக் களம்

Rupees-2-lakh-investment-on-that-day-worth-Rupees-7600-crore-today-Thyrocare-Velumani-winning-story

சினிமாவில் ரஜினிகாந்த் பேசுவது அனைத்தும் பஞ்ச் வசனங்களாகவே நமக்கு தோன்றும். அதுபோல தொழில்துறையை எடுத்துக்கொண்டால் 'தைரோகேர்' வேலுமணி பேசுவது அனைத்துமே 'பஞ்ச்' டயலாக்தான். அவருடன் உரையாடும் அல்லது அவரது உரையை கேட்டிருப்பவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள். கீழே இருப்பவை அனைத்தும் வேலுமணியுடன் உரையாடும்போது என் நினைவில் இருக்கும் சில 'பஞ்ச்'கள்...


Advertisement
  • "Burn calories not Salaries"
  • "Lucky I was Poor"
  • "Act poor; Avoid EMI"
  • "Romanced with Risk"
  • "Stamina is currency"
  • "You think or decide; cannot do both."

இவற்றைப் படிக்கும்போது எதோ சுயமுன்னேற்ற பேச்சாளர்கள் பேசியதுபோல தோன்றும். சுயமுன்னேற்ற பேச்சாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் பல விஷங்களை படித்து, கற்று அதன் பிறகு பேசுகிறார்கள். ஆனால், வேலுமணி இவை அனைத்தையும் உணர்ந்து, அவற்றைக் கடைபிடித்து வெற்றியடைந்த பிறகு கிடைத்த அனுபவத்தில் பேசுகிறார்.

image


Advertisement

2015-ம் ஆண்டுக்கு முன்பு வேலுமணி குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. 2010-ம் ஆண்டு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டை பெற்றார். 2015-ம் ஆண்டு ஐபிஓ தொடர்பான பணியை தொங்கும்போதுதான் 'தைரோகேர்' (Thyrocare) குறித்து தெரியவந்தது. அதுவரை அவர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். வீடு, அலுவலகம் என வெவ்வேறு கிடையாது. அனைத்தும் ஒரே வளாகத்தில்தான். சுற்றுலா, நண்பர்கள், தொழில் அமைப்புகள் எதிலும் கலந்துகொண்டது கிடையாது. சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய 'தைரோகேர்' நிறுவனத்தை 'பார்ம்ஈஸி' நிறுவனத்திடம் விற்றுவிட்டார்.

வேலுமணியின் சொந்த முயற்சியால் 1996-ம் ஆண்டு 2 லட்ச ரூபாய் முதலீட்டில் 'தைரோகேர் டெக்னாலஜீஸ்' நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது 7600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக, இந்த 25 ஆண்டுகளில் தைரோகேர் மாறி இருக்கிறது. இதில் 66 சதவீத பங்குகள் நிறுவனர் வேலுமணி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்தது. இந்த பங்குகளைத்தான் ரூ.4,546 கோடிக்கு 'பார்ம்ஈஸி' விற்றுவிட்டு அடுத்த புதிய இன்னிங்ஸுக்கு தயாராகியிருக்கிறார் வேலுமணி.

வறுமையான காலகட்டம்: ஒவ்வொருவரும் தன்னுடைய தொழில் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்வார்கள். எம்பிஏ, பெற்றோர்கள், நண்பர்கள், ஐடியா என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால், இவரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கூறுவது வறுமையைதான். வறுமைதான் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. தொழில் என்பதே பிரச்னையை தீர்ப்பதுதான். ஆனால், கிராமத்தில் வறுமையில் இருந்தால் தினமும் ஒரு பிரச்னையை தீர்க்க வேண்டி இருக்கும். 'அந்த வறுமைதான் என்னை உயர்த்தியது' என வேலுமணி கூறுவார்.


Advertisement

கோவை அருகே இருக்கும் அப்பனாயக்கன்பட்டிபூதூர் பிறந்தவர் வேலுமணி. "நான் டிகிரி வாங்கியதற்கு காரணம், மதிய உணவு திட்டம்" என தன்னுடைய ஒவ்வொரு உரையிலும் நினைவுகூர்கிறார். பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை காலணி கிடையாது, முழு பேன்ட் கிடையாது என்பதுதான் குடும்பத்தின் நிலை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பிஎஸ்இ படித்தார். படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் இடத்தில் இவர் சந்தித்த முக்கியமான இரண்டு பிரச்னைகள்... ஆங்கிலம் மற்றும் அனுபவம்.

முதலில் வேலை கிடைத்தால்தான் அனுபவம் கிடைக்கும்; ஆனால் வேலையே கிடைக்காத பட்சத்தில் அனுபவம் எப்படி கிடைக்கும் என கூறும் வேலுமணிக்கு, பல நேர்காணல்களுக்கு பிறகே வேலை கிடைத்தது. தற்போது 'தைரோகேர்' நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் அனுபவம் இல்லாமல் முதல் முறையாக வேலைக்கு செல்பவர்கள்தான். அதேபோல வேலைவாய்ப்பில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை (தைரோகேர் பிஸினஸ் மாடலில் இது சாத்தியம்).

முதல் வேலை கிடைத்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் மூடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அங்கு வேலை கிடைக்கிறது. மும்பையில் யாரையும் தெரியாது. அதைவிட முக்கியம் அவருக்கு இந்தியும் மராத்தியும் தெரியாது. தற்போது இவர் வழக்கமான மும்பைவாசிகள் போல அவர்கள் மொழியில் பேச முடியும். மும்பையில் உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் இந்தியிலே அவரது உரை இருக்கும். ரூ.500-ல் மும்பை சென்று, ரயில் நிலையத்தில் முதல் சில நாட்கள் தங்குகிறார்.

வேலையில் கவனம் செலுத்துகிறார். திருமணம் நடக்கிறது. மனைவியும் வேலைக்கு செல்லத்தொடங்குகிறார். தைராய்டு பயோகெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் பெறுகிறார். எளிமையான வாழ்க்கை முறையால் 96-ம் ஆண்டு 2 லட்ச ரூபாய் சேமிப்பு கையில் இருக்கிறது.

'உலகில் நல்ல முடிவு என ஒன்று கிடையாது. ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவை நல்ல முடிவாக மாற்ற வேண்டும்' என அடிக்கடி கூறுவார் வேலுமணி. அதனால் நிலையான வருமானம் வரும் அரசாங்க வேலையை தன்னுடைய 37 வயதில் துறந்துவிட்டு 'தைரோகேர்' தொடங்குகிறார்.

"35 வயதில் வீடு வாங்கிவிட வேண்டும் என பலரும் திட்டமிடுகிறார்கள். ஆனால், 35 வயதில் வீடு வாங்கி, 55 வயது வரை இஎம்ஐ செலுத்தும் சூழலுக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். ஒருவேளை நான் வீடு வாங்கி இருந்தால் தொழில் தொடங்க முடியாமல் கூட போயிருக்கும். தைரோகேர் நிறுவனம் அமைந்திருக்கும் வளாகத்தில்தான் வீடு இருக்கிறது. தற்போது நிறுவனத்தை விற்றுவிட்டதால் இனிமேல்தான் குடியிருப்பதற்கு வீடு வாங்க வேண்டும்" என்று வேலுமணி தெரிவித்திருக்கிறார்.

பிஸினஸ் மாடல்: 20 கிராம் எடையுள்ள தைராய்டு, பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இதன் பின்புலத்தில் பெரும் திட்டமிடல் இருக்கிறது. ஆரம்பத்தில் சில நூறு சாம்பிள்கள் மட்டுமே வந்த நிலையில், சாம்பிள் அதிகரிக்க தொடங்கியது. நாடு முழுவதும் கிளைகள் மற்றும் ஃப்ரான்ஸைசி தொடங்கப்படுகிறது.

வழக்கமாக நாம் ரத்த பரிசோதனை கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆய்வகத்திலே ஒரிரு மணி நேரத்தில் முடிவுகள் கிடைத்துவிடும். ஆனால், நாடு முழுவதும் கலெக்ட் செய்யப்படும் சாம்பிள்கள் விமானம் மூலமாக மும்பையில் உள்ள ஆய்வகத்துக்கு வரும். இரவு முழுவதும் செய்யப்படும்; சோதனை சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கு இணையம் மூலம் அனுப்பப்படும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கு செலவாகும். ஆனால், அதைவிட ஒவ்வொரு இடத்திலும் ஒரு கோடி ரூபாய்க்கு மெஷின் வைத்தால் ஆகும் செலவு அதைவிட அதிகம். அதனால் மையப்படுத்தப்பட்ட பரிசோதனைக் கூடத்தை (Centralized Laboratory) வைத்திருக்கிறது 'தைரோகேர்'.

image

இதனால் போட்டி நிறுவனங்களை விட பல மடங்கு குறைவான கட்டணம் நிர்ணயம் செய்தாலும், லாப விகிதம் சீராக இருந்தது. போட்டி நிறுவனங்கள் ரூ.500 கட்டணம் வசூலித்தபோது இவர் ரூ100 மட்டுமே வசூலித்தார். ''கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்வதால் லாபம் ஈட்ட முடியாது. அதிக வால்யூம் இருந்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்'' என்பார். அதிக வால்யூம் செய்ய வேண்டும் என்றால் சென்ட்ரலைஸ்டு லெபாரட்ரி இருந்தால்தான் சாத்தியம்.

உதாரணத்துக்கு ஓலா, உபெர் வருவதற்கு முன்பு ஒரு நாளைக்கு வாடகை கார் குறைந்த நேரத்துக்குதான் ஓடும். அதனால் வாடகை அதிகமாக இருக்கும். ஆனால், ஓலாவுக்கு பிறகு கார் செயல்படும் நேரம் அதிகரித்தது, வாடகை குறைந்தது. அதுபோலவே சென்ட்ரலைஸ்டு லெபாரட்ரி வைத்திருப்பதால் பணியாளர்களுக்கு முழுமையான வேலை கொடுத்தல், மெஷினை முழுமையாக பயன்படுத்த முடியும் என வேலுமணி ஒப்பீடு செய்வார்.

ஐபிஓ: நிறுவனம் வேகமாக வளர்ந்துவருகிறது. அதனால் பல பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். ஆனால், விருப்பம் இல்லை. ஆனாலும் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரிந்துகொள்வதற்காக 10 சதவீத பங்குகளை விற்கிறார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஓ கொண்டுவருகிறார்.

ஐபிஓ சமயத்தில் முக்கியமான ஒரு வினோதமான விஷயம் நடந்தது. ஐபிஓ முடிவடையும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்பாக கோடக் மஹிந்திரா வங்கி முதலீட்டுகான விண்ணப்பத்தை சமர்பித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதனால், வங்கி வழக்கு தொடுத்தது.

'நாங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கான விண்ணப்பத்தையும் சமர்பித்துவிட்டோம். தொழில்நுட்ப கோளாருக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?' என வங்கி தெரிவிக்கிறது. விசாரித்த நீதிபதி, 'கோடக் வங்கி முதலீடு செய்வதில் உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருக்கிறதா?' என தைரோகேர் நிறுவனத்திடம் கேட்கிறது. அதன் பிறகு வங்கியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதாவது, 'நான் முதலீடு செய்ய தயார்; ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்' என கோடக் கூறியது.

இதன்பிறகு ஐபிஒ பெரும் வெற்றி அடைந்தது. 75 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. அதனைத் தொடந்து பட்டியலாகும் அன்று 38 சதவீதம் உயர்ந்து ரூ.3,320 கோடியாக இருந்தது.

பார்ம்ஈஸி: பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் பலரும் வந்ததுபோல நிறுவனத்தை வாங்குவதற்கும் 25-க்கும் மேற்பட்டவர்கள் நெருங்கி இருக்கிறார்கள். ஆனால், சரியான சமயம் மற்றும் சந்தை மதிப்புக்காக காத்திருந்தார். கோவிட் பேரிடர் காலம், பார்மா துறைக்கு பெரும் வாய்ப்பை உருவாக்கி இருந்தால் மையங்களில் பரிசோதனைகள் அதிகரித்தன. தற்போது பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இருக்கும் சமயத்தில், தைரோகேர் நிறுவனத்தில் தனக்கு இருக்கும் 66.1 சதவீத பங்குகளை வேலுமணி விற்றிருக்கிறார். இந்த பங்குகளின் மதிப்பு ரூ.4,546 கோடி.

பணம் இருந்தால் பணத்தை போட்டு பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஸ்டாமினா (Stamina) இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். அதனை உருவாக்கிகொள்வதுதான் தொழில்முனைவோர்களுக்கு அவசியம் என்பதை சொல்லாமல் சொல்கிறார் வேலுமணி.

சமீப காலமாக பேச்சு என்பது வேலுமணியின் மற்றொரு அடையாளம் ஆகிவிட்டது. டை உள்ளிட்ட தொழில் அமைப்புகள், நிர்வாக கல்லூரிகள் என மாணவர்கள் மற்றும் தொழில்துறையினரிடம் உரையாடுவதை முக்கியப் பணியாக வைத்திருக்கிறார்.

சிலர் எப்படி வெற்றியடையலாம் என எங்கோ நடந்த உதாரணங்களை சொல்லுவார்கள். ஆனால், நான் எப்படி வெற்றியடைந்தேன் என சொல்வதுதான் வேலுமணியின் பாணி. இங்கு சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் இதனை, இப்படி செய்தேன் என சொல்வதற்கான ஆள்கள் குறைவு.

62 வயதாகும் வேலுமணி தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை விரைவில் தொடங்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

- வாசு கார்த்தி


Advertisement

Advertisement
[X] Close