[X] Close

பஞ்சம் போக்கிய மதுரை குஞ்சரத்தம்மாள்! - 'பேரிடர்' கால தேவதையின் கதை

சிறப்புக் களம்,வீடியோ ஸ்டோரி

இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் நோய் கொரோனா., கொரோனா ஒரு பக்கம் உயிர்க் கொல்லியாக மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதே நேரம் அதன் இன்னொரு முகம் மிகக் கோரமானதாகவும் உள்ளது. உலக பொருளாதாரத்தை அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது இந்தக் கொரோனா. மீண்டும் ஒரு தாது ஆண்டு பஞ்சத்தை நாம் சந்திக்க வேண்டி வருமோ என்கிற அச்சமும் நம்முள் தொற்றிக் கொள்ளாமல் இல்லை. அது என்ன தாது ஆண்டு பஞ்சம் என்கிறீர்களா..? ‘தாது ஆண்டு’ குறித்து பேசினால் மதுரை குஞ்சரத்தம்மாள் குறித்து பேசாமல் எப்படி....? இரண்டையும் தெரிந்து கொள்வோம்.


Advertisement

image

அப்படியொரு உணவுப் பஞ்சத்தை அதற்கு முன் தமிழகம் சந்தித்திருக்காது. 1875 முதல் 1880 வரையிலான கால கட்டம் தமிழக நகர்பாதையில் நெறிஞ்சி முள்ளாக வரலாற்றில் இன்றும் துருத்தி நிற்கிறது. மெலிந்த உடலோடு எலும்பும் தோலுமாக முதலில் சாகப் போவது பிள்ளையா பெற்றோரா என எண்ணித் துடிக்கும் படி மங்கோலியாவுக்கு சவால் விட்டு கோர தாண்டவம் ஆடியது பஞ்சம்., அதனை தாது ஆண்டுப் பஞ்சம் என்கின்றன ஆவணங்கள்.


Advertisement

ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான இந்த பஞ்சம் காரணமாக அரிசி கிடைக்காமல் மக்கள் கீரைகளையும் கிழங்குகளையுமே மூன்று வேளையும் உண்ண நேர்ந்ததாம். தமிழகமே இப்பவோ அப்பவோ என இருந்த நிலையில் மதுரையை மீட்க தேவதையொருத்தியின் ஈரக்கரங்கள் நீண்டன. அவள் பெயர் குஞ்சரம், அவரை மதுரை மக்கள் குஞ்சரத்தம்மாள் என பெரு மரியாதையுடன் அழைத்தனர். அதற்குக் காரணம் அவர் பஞ்சகாலத்தில் மதுரை மக்களை காக்க தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றார் என்பதுதான்.

image

குஞ்சரத்தம்மாள் ஒரு தேவதாசி, மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அப்போது அவருக்கு சொந்தமாக இரண்டு மாளிகைகள் இருந்திருக்கிறன. தங்கம் வைரம் என எக்கச்சக்க ஆபரணங்கள் அவரிடம் இருந்தன. அவரது மாளிகைக்கு வரும் செல்வந்தர்கள் குஞ்சரத்தம்மாளின் அழகில் மயங்கி அனைத்தையும் அள்ளிக் கொடுத்திருந்தனர். ஆனால் குஞ்சரத்தம்மாள் மதுரைக்கு ஒரு துயர் வந்த போது தான் சம்பாதித்த சொத்துக்களை மக்களுக்கே வழங்கி இருக்கிறார். தாது பஞ்சத்தால் மக்கள் பசியில் மடிவதைக் கண்ட குஞ்சரத்தம்மாள் தனது மாளிகை வாசலில் கஞ்சித் தொட்டி திறந்திருக்கிறார். வரலாற்றில் அரசு சாராத ஒரு நபர் பொது மக்களுக்கு கஞ்சித் தொட்டி திறந்தது அதுவே முதல் முறையாக இருக்கலாம். அதனால் தான் குஞ்சரத்தம்மாளை வரலாறு வரவு வைத்துக் கொண்டது. பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தான்எழுதியிருக்கும் காவல் கோட்டத்தில் குஞ்சரத்தம்மாள் குறித்தும் பதிவு செய்திருக்கிறார்.


Advertisement

மதுரை குஞ்சரத்தம்மாள் தன்னிடம் இருந்த தங்கம் வைரம் அனைத்தையும் விற்று எங்கெங்கோ இருந்து அரிசி மற்றும் தானியங்களை வரவழைத்து தன் மாளிகை வாசலில் கஞ்சி காய்ச்சி ஊற்ற ஆரம்பித்தார். அணையாமல் எரிந்தது அவரது மாளிகையின் ஈர அடுப்பு. குஞ்சரத்தம்மாள் கஞ்சி ஊற்றும் விசயம் மதுரை வாசிகளுக்கு செவிவழியாக எட்டவே பலரும் அங்கு வந்து பசியாறினர். இந்த செய்தி அப்போதைய மதுரை ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டருக்கு எட்டவே அவர் நெகிழ்ந்து போனாராம். அரசு செய்ய வேண்டிய காரியத்தை இந்தப் பெண் செய்கிறாரே என எண்ணி பிறகு அரசு சார்பில் மூன்று இடங்களில் உடனடியாக கஞ்சித் தொட்டி திறந்திருக்கிறார் ஜார்ஜ் பிராக்டர்.

image

குஞ்சரத்தம்மாளின் வீட்டு அடுப்பு தொடர்ந்து 13 மாதங்கள் வரை எரிந்திருக்கிறது. அவர் மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த தனது மாளிகைகளை விற்றுவிட்டு சாதாரண வீட்டிற்கு குடி போனார். பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருக்கிறார். தாது பஞ்சத்திலிருந்து மதுரை மெல்ல மீண்டிருந்த ஒரு நாளில் குஞ்சரத்தமாள் தனது இறுதி மூச்சை விடுவித்தார். குஞ்சரத்தம்மாளின் சாவிற்கு அவரால் பசியாறிய மதுரை மக்கள் பெருமளவில் கூடினர். குஞ்சரத்தம்மாளின் இறுதி ஊர்வலம் ஜேஜேவென மதுரை மெச்ச நடந்ததாம். அன்றைய ஆங்கிலேய அரசு ஒரு தனிமனுஷியின் இறுதி ஊர்வலத்தில் அவ்வளவு பேர் கூடியதைக் கண்டு ஆச்சர்யப்பட்டது. தற்போதைய நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்கள் பலரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை காணமுடிகிறது. இப்படியாக வரலாற்றின் அனைத்து பக்கங்களிலும் வறட்சிக்கும், போராட்டத்திற்கும் இணையாக மனிதநேயமும், மக்கட்பண்பும் துளிர்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது.

Related Tags : historymaduraicorona storieshumanity

Advertisement

Advertisement
[X] Close