Published : 25,Jun 2021 04:42 PM

'இலக்கு 2022' - யோகிக்காக மெனக்கெடும் பாஜக தலைமை... உ.பி.யில் அடுத்தடுத்து அதிரடிகள்!

How-the-BJP-is-fixing-UP-problems

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையில் சந்திக்க இருந்த அனைத்து சவால்களையும் களையத் தொடங்கியிருக்கிறது பாஜக மத்திய தலைமை. இதற்காக கட்சியில் இருக்கும் குறைபாடுகளை எவ்வாறு பாஜக தலைமை சரிசெய்து வருகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அம்மாநில பாஜக குறித்து வெளிவரும் செய்திகள், அக்கட்சியின் மத்திய தலைமையை அசைத்துப் பார்த்திருக்கிறது. இதையடுத்து உத்தரப் பிரதேச பாஜகவில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக மூன்று நாள் பயணமாக லக்னோவில் தங்கி ஆய்வு நடத்தி முடித்திருக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ். இந்த அறிக்கையை தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடமும் சமர்ப்பித்துள்ளார்.

image

கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தனது அறிக்கையில், "மாநில பாஜகவின் தலைவர்களிடையே பிரிவினைவாதம், கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் கட்சியின் முன்னணி அமைப்புகளில் செயலற்ற தன்மை" இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அரசியல் ரீதியாக மிக முக்கியமான மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க எட்டு மாதங்களே உள்ளது. இந்த நிலையில், அவரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை திருத்த பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக கருதப்படுபவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அரவிந்த்குமார் சர்மா சமீபத்தில் உத்தரப்பிரதேச எம்எல்சியாக நியமிக்கப்பட்டார். இவருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் நிலவி வந்த நெருடலை பாஜக மத்திய தலைமை நீக்க முயற்சி எடுத்தது.

அதன்படி, ஜூன் 21 அன்று, சந்தோஷ் மீண்டும் லக்னோவுக்கு வந்து மாநில அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். இவர் பேசிய சில மணி நேரங்களில் அரவிந்த்குமார் சர்மா எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. அந்தக் கடிதத்தில், "முதல்வர் யோகி ஆதித்யநாத்ஜி தலைமையில் 2022 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்" என்று சர்மா எழுதியிருந்தார். சர்மாவின் கடிதம் யோகி ஆதித்யநாத்துடன் ஏற்பட்ட பிளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.image

அடுத்த நாள் பிற்பகல், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வீட்டிற்கு மதிய உணவிற்கு யோகி ஆதித்யநாத் வந்தார். யோகியின் இல்லத்துக்கு அருகிலேயேதான் கேசவ் பிரசாத்தின் வீடும் அமைந்துள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக யோகி அந்த வீட்டுக்கு அன்றுதான் சென்றார். இதையடுத்து இந்த செயலும் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் கேசவ் பிரசாத் மகனின் திருமண விருந்தில் கலந்துகொள்ள யோகி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல, யோகி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கும் கேசவ் பிரசாத் கடந்த சில நாட்களாக சொல்லி வரும் ஒரு விஷயம், `வரவிருக்கும் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் இல்லாமல்தான் தேர்தலை சந்திக்கும்'. இது யோகிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் விஷயம் என்பதால் பிரசாத்தை நேரில் சமாதானம் செய்ய பாஜக தலைமையின் பேரில், அவரின் வீட்டுக்கே சென்று யோகி பேசினார் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பி.ஜி கல்லூரியின் இணை அறிவியல் பேராசிரியர் பிரஜேஷ் மிஸ்ரா பாஜகவின் இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அது தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், ``2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது மாமா சிவ்பால் யாதவுக்கும் இடையிலான சண்டையின் பின்னர் சமாஜ்வாடி கட்சியின் தலைவிதியை பாஜக கண்டிருக்கிறது. கட்சியில் ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை அனுப்பும் எதுவும் நடக்கக்கூடாது என்று பாஜக விரும்பவில்லை. அரவிந்த்குமார் சர்மாவை யோகியின் அமைச்சரவையில் சேர்ப்பது குறித்த ஊகங்களுக்கு கட்சி முற்றுப்புள்ளி வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.

BJP's Problems in Assam - Sentinelassam

இதற்கிடையே, பி.எல்.சந்தோஷின் ஜூன் 21 வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்சியின் மாநில பிரிவு 2022 தேர்தலுக்கான கட்சியின் அணியை வடிவமைக்கத் தொடங்கியது. அதன் முன்னணி அமைப்புகளை மறுசீரமைப்பதன் மூலம் இதனை தொடங்கியுள்ளது. ஃபாரூகாபாத்தில் வசிக்கும் பிரன்ஷு தத் திவேதி என்ற பாஜக பிரமுகர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த தலைவர் மட்டுமில்லாமல், சமீபத்தில் பாஜகவின் யுவ மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சில காலமாக, பாஜக அரசு தங்கள் சமூகத்தை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன அம்மாநிலத்தின் சில பிராமண அமைப்புகள். இந்த அதிருப்தியை ஈடுகட்டவே, திவேதிவுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், எட்டாவா நகர பெல்ட்டில் வசிக்கும் அதிகப்படியான ஷாக்யா சமூக மக்களின் வாக்குகளை கவரும் வகையில், அவுரியாவில் வசிக்கும் மாநிலங்களவை எம்.பி.யான கீதா ஷாக்யாவை மஹிலா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக நியமித்துள்ளது. எட்டாவா, அவுரியா, மைன்பூரி, ஃபிரோசாபாத், ஆக்ரா ஆகிய பகுதிகளில் ஷாக்யா சமூக மக்கள் வலுவாக உள்ளனர். இப்படி, 2022 தேர்தலுக்கு முன்னதாக செல்வாக்கு மிக்க உயர் சாதியினரின் உணர்வுகளை உறுதிப்படுத்த முயற்சியாக இது போன்றவர்களின் நியமனங்களை ஏற்படுத்தி வருகிறது பாஜக.

மேலும், டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு தற்போது ஆதாரமாக இருந்து வருவது மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள். இவர்களின் இயக்கத்திற்கான ஆதரவைக் குறைக்க பாஜக கையிலெடுத்திருப்பது இதுபோன்ற ஒரு சாதி விளையாட்டு தான். காஜியாபாத்தில் வசிக்கும் நரேந்திர குமார் காஷ்யப் பாஜக பின்தங்கிய வகுப்பு மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்யப் நிஷாத் சமூகத்தைச் சேர்ந்தவர். பிப்ரவரியில், காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, பிரயாகராஜில் நிஷாத் சமூகத்தினரிடையே கூட்டங்களை நடத்தி பாஜக எதிர்ப்பு சூழ்நிலையை உருவாக்க முயன்றார்.

Uttar Pradesh Civic Elections 2017 Results: BJP Wins Big in UP, Yogi  Adityanath Passes First Litmus Test | India.com

சமூக நீதிக் குழு-2001இன் அறிக்கையின்படி, உ.பி.யில் நிஷாத் சமூகத்தின் மொத்த மக்கள் தொகை 4.3 சதவீதமாகும். நதிகளின் கரையில் அமைந்துள்ள சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களின் மக்கள் தொகை 5,000 முதல் 30,000 வரை உள்ளது. அதனால்தான் நிஜாத் வாக்கு வங்கி பாஜக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் முக்கியமானது. இதனையடுத்தே அம்மக்களுக்கு உரிய முக்கியவத்துவம் கொடுத்து கவரும் வகையில், நரேந்திர குமார் காஷ்யப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய வகுப்புகளில் உள்ள யாதவ் அல்லாத ஓபிசி சாதிகளைப் போலவே, தலித் சமுதாயத்தின் மீதும் பாஜகவின் கவனம் திரும்பியுள்ளது. 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் பாசி சாதியினரிடமிருந்து பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. மோகன்லால் கஞ்ச் எம்பியான கவுசல் கிஷோரை பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பட்டியல் சாதி மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக நியமித்ததற்கு இதுவே காரணம். ஜாதவர்களுக்குப் பிறகு உ.பி.யில் உள்ள தலித் சமூகத்தில் பாசி இரண்டாவது மிக உயர்ந்த சாதி (16%) என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, முன்னணி அமைப்புகளை மறுசீரமைக்கும் அதே வேளையில் சாதி மற்றும் பிராந்திய வேலைகளில் கவனம் செலுத்தி உடைந்திருக்கும் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது பாஜக தலைமை. இந்த யுக்திகள் எந்த அளவுக்கு பாஜகவுக்கு கைகொடுக்கும் என்பது தேர்தலுக்கு பின்பு தெரிந்துவிடும்.

தகவல் உறுதுணை: India Today

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்