[X] Close

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ : தமிழ் அன்னையின் தவப்புலவன் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று!

சிறப்புக் களம்

---I-will-not-perish-forever-----Kannadasan-s-birthday-today-

தத்துவ பாடல்கள் மூலமாக தமிழ்மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று..!


Advertisement

முத்தையா என்ற இயற்பெரை கொண்ட கவியரசர் கண்ணதாசன் 1927ஆம் ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர், எட்டாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வியை படித்த முத்தையாவுக்கு, கவிஞானம் பிறவிசொத்தாக இருந்தது. பள்ளிக்கல்வியை அதிகம் படிக்காத முத்தையா முழுக்க முழுக்க படித்தது வாழ்க்கை கல்விதான். சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த முத்தையா பார்க்காத வேலைகளே இல்லை, அவர் சந்தித்த மனிதர்களும், அவர்களின் உணர்வுகளுமே பின்னாட்களில் அவரது எழுத்துக்களில் பாய்ந்த உயிர்த்தன்மைக்கு உரமாக இருந்தது. முத்தையாவாக இருந்த இவர் ஒரு பத்திரிகை பணிக்காக தனது பெயரை கண்ணதாசன் என மாற்றினார், பின்னர் பல பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமும் கண்ணதாசனுக்குண்டு.

image


Advertisement

பின்னாட்களில் சினிமாவில் எழுதவேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்புகளை தேடத்தொடங்கிய கண்ணதாசனுக்கு தொடக்கத்தில் நிராகரிப்புகளே மிஞ்சின. வலிகளை எல்லாம் புறந்தள்ளி, விடாமுயற்சியுடன் 1949 ஆம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘கன்னியின் காதலி’ படத்துக்காக இவர் எழுதிய, ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்பட பாடல். முதல் பாடலிலேயே கனவெல்லாம் நனவாகும் என நம்பிக்கையூட்டிய கண்ணதாசன், அதன்பின்னர் கால்நூற்றாண்டு காலம் தமிழ்சினிமா, தமிழ் இலக்கியம் இரண்டிலும் ‘வணங்காமுடி’ யாக, முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

காதல், சோகம், கொள்கை, தத்துவம், பெருமை, பெண் விடுதலை என எல்லாவகை பாடல்களிலும் கண்ணதாசனின் வார்த்தைகள் நடத்தியவை எழுத்து சாம்ராஜ்ஜியம். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல, பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்,  நினைக்க தெரிந்த மனமே, உன்கண்ணில் நீர் வழிந்தால், மயக்கமா கலக்கமா, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், வாழ நினைத்தால் வாழலாம், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், வீடுவரை உறவு, சட்டி சுட்டதடா,  ஆறுமனமே ஆறு என இவர் தொடாத ‘சப்ஜெக்ட்’ எதுவுமே இல்லை, அத்தனையிலும் முத்திரையும் பதித்தவர்.

தனது பாடல் வரிகள் மூலமாக தமிழ் மக்களை சிரிக்க வைக்க, அழவைக்க, உணர்வுப்பெருக்கெடுக்க, நம்பிக்கையூட்ட, நிலையாமை உரைக்க, நிம்மதி கிடைக்க என எல்லா ஜாலங்களையும் அவர் செய்தார். அச்சம் என்பது மடமையடா, நாடு அதை நாடு, ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே என எம்ஜிஆரின் அரசியல் கனவுக்கு பாடல்கள் மூலமாக உயிரூட்டியதில் கண்ணதாசனின் பங்கு முக்கியமானது. அதனால்தான் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனது ஆட்சி காலத்தில் 1978 ஆம் ஆண்டு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக ஆக்கினார் எம்ஜிஆர்.


Advertisement

image

திரையிசைப்பாடல்களுடன் நில்லாமல் திரைப்பட வசனங்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர் இவர், 1968 ஆம் ஆண்டு கண்ணதாசன் வசனம் எழுதிய ‘குழந்தைக்காக’ திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இவர் சில படங்களை தயாரித்தும், இயக்கியும் ,நடித்தும் இருக்கிறார். சினிமா பங்களிப்போடு இலங்கிய பங்களிப்பையும் சிறப்புடன் செய்தவர் கண்ணதாசன், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 10 காப்பியங்கள், 9 தொகுப்புகள், 8 சிற்றிலக்கியங்கள், 26 புதினங்கள், 10 சிறுகதைகள், 26 தத்துவ நூல்கள், 10 சமய நூல்கள், 9 உரைநூல்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் இவர். இவரின் ‘சேரமான் காதலி’ எனும் நூல் சாகித்திய அகாடமி விருதினை பெற்றிருக்கிறது.

எழுத்துத்துறையில் முடிசூடா மன்னனாக விளங்கிய கண்ணதாசனின் அரசியல் பயணம் தோல்விகள் நிரம்பியது, இதனை தத்துவார்த்தமாக தனது நூல்களின் வாயிலாக உலகத்துக்கு சொன்னவர் இவர். இவரின் தத்துவ பாடல்களும், தத்துவ எழுத்துகளும் தனித்து பெருமை கொண்டது. கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம், மனவாசம், சேரமான் காதலி, கவிதை தொகுப்புகள் உள்ளிட்ட பல நூல்கள் இப்போதுவரை அதிகம் விற்பனையாகும் புத்தகங்களாக உள்ளது . ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமல் இருப்பான் ஒருவன், அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்’ என சொன்னவர் கண்ணதாசன். இப்போதுவரை தன் எழுத்துக்கள் தமிழ்மக்களின் இதய ராஜ்ஜியத்தை ஆளும் கண்ணதாசன் 1981 ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அமெரிக்காவில் உயிரிழந்தார்.

கண்ணதாசன் இறந்து 50 ஆண்டுகள் ஆனாலும்கூட இப்போதும் அவரின் பாடல்வரிகள் பலருக்கு தாலாட்டாக, நம்பிக்கையாக, தத்துவார்த்தமாக, நிம்மதி தரும் அருமருந்தாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்று அவர் எழுதிய வரிகளுக்கேற்ப இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் கண்ணதாசன்.

 


Advertisement

Advertisement
[X] Close