[X] Close

ஓடிடி திரைப் பார்வை: 'ஆஃப்டர்ஷாக்' - திரையில் நிலநடுக்கம்... மனதில் அதிர்வுகள்!

சினிமா,சிறப்புக் களம்

Aftershock-2010

பெருமழையோ பேரிடரோ இயற்கையின் முன் அனைவரும் சமம். ஜூலை 27, 1976, சீனாவின் டாங்சன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை சீற்றமாக அறியப்படுகிறது. 23 நொடிகளில் இயற்கை சுமார் 2,50,000 மனித உயிர்களை வேட்டையாடி ஓய்ந்தது. ஆனால், பலி எண்ணிக்கை 6,55,000 என்கிறது ஓர் அறிக்கை. அச்சம்பவத்தின் நினைவாக சீன அரசு உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பியது. 12,000 சதுர அடி பரப்பளவுள்ள நினைவிடம் ஒன்றை உருவாக்கி, அதில் 1976 பேரழிவின்போது எடுக்கப்பட்ட 400 புகைப்படங்கள் மற்றும் 600 கட்டுரைகளை காட்சிக்கு வைத்துள்ளது. அச்சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட நாவல் 'லிங் ஸாங்' (Ling Zhang). அதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே 2010-ஆம் ஆண்டு வெளியான 'ஆஃப்டர் ஷாக்' (Aftershock). இப்படம் ‘டாங்சன்’ நிலநடுக்கத்தை மீண்டும் ஒருமுறை நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது.


Advertisement

image

உழைக்கும் மக்களின் தேசமான சீனாவில் 1976-ல் துவங்குகிறது காட்சி. லி யுஆனி (Li Yuanni) தனது கணவன், 5 வயது மகன் ஃபாங்டா (Fang Da) மற்றும் மகள் ஃபாங் டெங் (Fang Deng) உடன் வாழ்ந்து வருகிறாள். கணவன் - மனைவி இருவரும் இரவில் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் வீட்டில் குழந்தைகள் தனியாக உறங்குகிறார்கள். அதிகாலை சரியாக மணி 3:42-க்கு பேரொலியுடன் அதிர்கிறது டாங்சன். நிலம் தன் வயிற்றைக் கிழித்து மனிதர்களை நிரப்புகிறது. சடலங்கள் மீது கட்டடங்கள், கட்டடங்கள் மீது சடலங்கள் என மாறி மாறி சமாதி எழும்புகிறது.


Advertisement

தம்பதிகள் தங்கள் வீடு நோக்கி ஓடுகிறார்கள். குழந்தைகள் இருவரும் நடப்பது புரியாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். திசைகள் தோறும் மனித சத்தம். காற்றெல்லாம் சாவின் நெடி. 23 நொடிகள் நீடித்த அந் நிலநடுக்கத்தில் பல்லாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். லி யுஆனி (Li yuanni) தனது கணவனையும் இழக்கிறாள். குழந்தைகள் இருவரும் இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். பூகம்பத்திற்கு பிறகு பேரமைதி நிலவுகிறது.

image
இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி ஒரு கல்லால் தரையில் தட்டி ஒலி எழுப்பி கவனம் பெறுகிறாள். மகன், மகள் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற சூழலில் யாரைக் காப்பாற்றுவது என முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் தாய் “என் மகனைக் காப்பாற்றுங்கள்” என்கிறாள். அந்தச் சொல் இடி பாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த சிறுமியின் காதில் விழுகிறது. அச்சிறுமியின் கண்களில் வெறுப்பின் கண்ணீர் வழிகிறது. இப்போது அவள் கல்லால் ஒலி எழுப்புவதை நிறுத்தியிருந்தாள். ஒரு கையை இழந்த நிலையில் மகன் காப்பாற்றப்படுகிறான்.

ஊர் முழுக்க சடலங்கள் கிடத்தப்பட்டிருக்கிறது. அதில் தனது தந்தையின் அருகில் சிறுமி ஃபாங்டெங் (Fang Deng) கிடக்கிறாள். மீட்புக் குழு தீவிரமாக வேலை செய்து முடிந்த மட்டும் பலரை மீட்கிறது. இயற்கை குற்றவுணர்ச்சியில் அழுவது போல அப்போது மழை பெய்கிறது. உண்மையில் சிறுமி ஃபாங்டெங் இறக்கவில்லை, மயங்கித்தான் கிடந்தாள்.


Advertisement

image

இப்படியாகப் பிரியும் அக்குழந்தைகளின் வாழ்க்கை என்னவானது? நிலநடுக்கம் அவர்களது வாழ்வில் நிகழ்த்தியவை என்னென்ன? - இவையெல்லாம் கனமான திரைக்கதை. அவர்களின் வாழ்க்கை நதியின் கிளைகளாக விரிகிறது. ஃபாங்டெங் தத்தெடுக்கப்பட்டு ராணுவ தம்பதிகளின் ஒரே செல்ல மகளாக வளர்கிறாள்.

ஃபாங்டெங் (Fang Deng)-ஐ வளர்த்த தந்தை அவளை ஒரு முறை ”டாங்சன் சென்று வா, அங்கு உன் உறவினர்கள் யாராவது அங்கு உயிரோடு இருக்கலாம்" என்கிறார். ஆனால் ஃபாங்டெங்கிற்கு தான் இடிபாடுகளில் சிக்கியிருந்தபோது தன் சகோதரனை காப்பற்றச் சொல்லி தன்னை கைவிட்ட தாயை தேடிச் செல்ல மனமில்லை. அவள் உடைந்து அழுகிறாள். “நான் அங்கு போகமாட்டேன், நீங்கள்தான் என் அப்பா” என தன்னை வளர்த்த தந்தையின் தோளில் சாய்ந்து அழுகிறாள். ஒளியின் வேகமாக முப்பது வருடங்கள் ஓடி மறைந்தது.

image

காட்சி 2008-ல் விரிகிறது. ஃபாங்டெங் தனது கணவன் மற்றும் மகளோடு கனடாவில் வசிக்கிறாள். 30 வருடங்களுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் டிவியில் காட்டப்படுகிறது. ஃபாங்டெங் தன் சிறுவயது அனுபவத்தை நினைத்துக் கொள்கிறாள். தானும் உதவ வேண்டும் என சீனா விரையும் அவள் மருத்துவ மீட்புக் குழுவோடு சேர்ந்து உதவுகிறாள். அங்கு தனது சகோதரனும் உதவி செய்ய வந்திருப்பதை அறிந்து நெகிழ்கிறாள். அவனோடு தனது தாயை காணச் செல்கிறாள். தாயும் மகளும் 30 வருடம் கழித்து சந்திக்கும் காட்சியில் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கோரி அழுகிறார்கள். தனது தந்தையின் சமாதியருகே ஃபாங்டெங்கிற்கு அமைக்கப் பட்டிருக்கும் சமாதியில் ‘ஆப்டர் ஷாக்’ நிறைவு பெறுகிறது.

கதையை முழுமையாக சொல்லிவிட்டதுபோல தோன்றலாம். ஆனால், இங்கே கதையைத் தாண்டி, காட்சிகளும் அவை வெளிக்கொணரும் உணர்வுகளும்தான் திரை அனுபவத்தில் நம்மை திக்குமுக்காடவைக்கும். ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் வாழ்வில் வந்து போகிற தற்காலிக மனித முகங்களையும், உறவுகளின் நிலையற்ற தன்மையினையும் இயற்கையின் பெரும் பலத்தையும் நிஜ சம்பவத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குநர் ப்பெங் ஸ்யோகாங் (Feng Xiaogang) தனிக் கவனம் பெறுகிறார்.

image

சீனா, பெய்ஜிங், துபாய் உட்பட 26-க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்ட இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. ஒளிப்பதிவுக் குழுவும் கிராபிக்ஸ் & அனிமேஷன் குழுவும் இத்திரைப்படத்திற்கு வழங்கியிருக்கும் அசுர உழைப்பினை நிலநடுக்க காட்சிகளில் ரிக்டரில் உணர முடிந்தது.

“முப்பது வருடம் முன் சரிந்த கட்டிடங்கள் நிமிர்ந்துவிட்டன, ஆனால் நொறுங்கிய என் தாயின் இதயம் அப்படியே கிடக்கிறது” போன்ற வசனங்கள் நம்மை இன்னும் உறவுகளுக்குள் நெருக்கம் கொண்டாடச் செய்கிறது.

image

எரிமலைகளோடு போராடும் ஜப்பான் போன்ற பிற தேசங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு பெருங்கொடையாக இயற்கை, பாதுகாப்பான வாழ்விடத்தையே கொடுத்திருக்கிறது. ஆனால், நாம் நமது அறிவியல் மேதாவித்தனத்தைக் காட்டி இயற்கையை சீண்டிக் கொண்டிருக்கிறோம். நல்ல காட்சி அனுபவம், சென்டிமென்ட் என மசாலாவாக ஒரு உண்மைக் கதையினை நமக்கு அழகாக வழங்கி இருக்கிறது இப்படக் குழு. 'ஆஃப்டர்ஷாக்' தற்போது யூடியூபில் காணக் கிடைக்கிறது.

> முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி! - ஒரு 'த்ரில்' அனுபவம்

Related Tags : Aftershockcinemacinema newsottindian cinema

Advertisement

Advertisement
[X] Close